சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெளிவாக பேசி உள்ளார் - சபாநாயகர் அப்பாவு பேட்டி
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கொண்டுவரப்பட்டால் 100% வெற்றி பெறாது என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
நெல்லை,
சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிப்பதுபோல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நெல்லையில் சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:-
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெளிவாக பேசி உள்ளார். இந்தியா சனாதனத்தின் படி இயங்குகிறது' என்ற ஆளுநரின் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் தான் உதயநிதி பேசியுள்ளார்.
மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் தீர்மானத்தை மத்திய அரசால் நிறைவேற்ற முடியும், ஆனால் மாநிலங்களவையில் போதிய ஆதரவு இல்லை. மாநில அளவில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படுகிறது, ஆனால் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கூட இந்த தீர்மானத்திற்கு இல்லை. ஜனநாயக முறைப்படி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கொண்டுவரப்பட்டால் 100% வெற்றி பெறாது" என்று கூறினார்.