சேலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
சேலத்தில் மாநகராட்சி தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு அதன் தரம் குறித்து கேட்டறிந்தார்.
காலை உணவு திட்டம்
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 54 தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 4 மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று காலை சேலம் சூரமங்கலம் முல்லை நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் முறையாக வழங்கப்படுகிறதா? என்பது குறித்து திடீரென ஆய்வுசெய்தார்.
தொடர்ந்து அந்த தொடக்கப்பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளிடம் உணவு சுவையாக மற்றும் தரமாக உள்ளதா? என்றும், காலை எத்தனை மணிக்கு உணவுகள் வழங்கப்படுகிறது எனவும், எத்தனை மாணவர்கள் இதனால் பயனடைகிறார்கள்? என்பது குறித்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் குழந்தைகளுடன் ஒன்றாக அமர்ந்து அவர்களுக்கு வழங்கப்பட்ட கிச்சடி உணவை சாப்பிட்டார்.
மாணவர்களுடன் கலந்துரையாடல்
பின்னர் அந்த பள்ளியில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் கற்றல், கற்பித்தல் முறை, அளிக்கப்படும் பயிற்சிகள், அதற்கான அட்டவணைகள் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், பள்ளியில் உள்ள கழிவறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும் என்று ஆசிரியர்களிடம் அறிவுரை வழங்கினார்.
இதையடுத்து நெத்திமேடு மாநகராட்சி தொடக்கப்பள்ளியிலும் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர், அங்குள்ள மாணவர்களிடம் கலந்துரையாடி என்ன உணவுகள் வழங்கப்படுகிறது என கேட்டறிந்து, சமையல் கூடத்தில் உணவுப் பொருட்களின் இருப்பு குறித்தும், பதிவேடுகள் குறித்தும் ஆய்வுசெய்தார். இந்த ஆய்வு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து பள்ளிகளில் ஆய்வு செய்துள்ளேன். ஒவ்வொரு மாவட்டத்திற்கு செல்லும்போது அங்குள்ள பள்ளிகளில் இதுபோன்று ஆய்வுகளை மேற்கொண்டு, முதல்-அமைச்சரிடம் அது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.
மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு
சேலம் மாநகராட்சியில் காலை உணவுத் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தினால் மாணவர்கள் பள்ளிக்கு காலையில் விரைவாக வருகின்றனர். புதிதாக மாணவர்களின் சேர்க்கையும் அதிகரித்துள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள் ஏதேனும் குறைகள் தெரிவித்தால் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். மாணவர்களின் வருகைப் பதிவேடு மற்றும் மாணவர்களின் சேர்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.