'சனாதனம் ஒழியும் வரை எனது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்' அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவேச பேச்சு


சனாதனம் ஒழியும் வரை எனது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவேச பேச்சு
x

‘சனாதனம் ஒழியும் வரை எனது குரல் ஒலித்துக்கொண்டே தான் இருக்கும்’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.

தென்காசி,

தென்காசியில் நேற்று மாலை தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

சமீபத்தில் ஒரு கட்சியினர் மாநாடு நடத்தினார்கள். அன்று மறுநாள் செய்திதாள்களை எடுத்து பார்க்கும்போது சாம்பார் சாதம் நன்றாக இருந்ததா?, புளி சாதம் எப்படி இருந்தது? இப்படி தான் செய்தி வந்தது. தமிழ்நாட்டுக்கு தேவையான தீர்மானங்கள் அங்கு எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மத்திய அரசுக்கு எதிரான 'நீட்' தேர்வு போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றவில்லை. எதற்காக மாநாடு நடத்தினார்கள்? என்று அவர்களுக்கே தெரியவில்லை.

எனது குரல் ஒலிக்கும்

தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்களால் தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் மத்திய அரசு இந்த திட்டங்களை பார்த்து வேறு எதுவும் சொல்ல முடியாத நிலையில் பொய்யான தகவல்களை பரப்புகிறது.

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று நான் கூறியதை திருத்தி வேறு விதமாக பொய்யாக பா.ஜ.க. அரசு பரப்பி வருகிறது. எப்படி இருந்தாலும் சரி சனாதனம் ஒழியும் வரை எனது குரல் ஒலித்து கொண்டேதான் இருக்கும்.

போலி சாமியார்

எனது தலைக்கு ஒரு சாமியார் ரூ.10 கோடி அறிவித்துள்ளார். அந்த சாமியாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்டபோது என்னிடம் ரூ.500 கோடி உள்ளது என்று கூறியுள்ளார். அப்போது அவர் போலி சாமியார் தானே?, இது போன்ற சாமியார்களை அடித்து விரட்ட வேண்டும். இதற்கு முன்பு ஒரு முறை கலைஞர் கருணாநிதிக்கு இதே போன்று தலையை சீவ ரூ.1 கோடி என அறிவிக்கப்பட்டது. அப்போதும் கலைஞர் கூறினார். என்னுடைய தலையை நான் சீவுவதே கிடையாது என்று.

இந்தியா கூட்டணி

கடந்த 9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் என்ன சாதனை நிகழ்த்தினார்கள்?, கலவரத்தை தான் தூண்டி விட்டார்கள். வட இந்தியர்களை குழப்பிவிட்டு அதில் குளிர்காய முயற்சித்தார்கள். நாம் அதை முறியடித்தோம். இப்போது உருவாகியுள்ள இந்தியா கூட்டணி மிகவும் வலுவான கூட்டணி.

தமிழ்நாட்டில் கலைஞரின் குடும்பம் தான் ஆட்சி செய்கிறது என்கிறார்கள். ஆமாம், தமிழகம் முழுவதும் கலைஞரின் குடும்பம் தான். ஆனால் மோடிக்கு ஒரே ஒரு நண்பர் மட்டும் தான். அது அதானி தான். சி.ஏ.ஜி. அறிக்கையில் ஒரு கிலோ மீட்டர் ரோட்டுக்கு ரூ.280 கோடி எப்படி செலவு செய்ய முடியும் என்று கேட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

பொற்கிழி

இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட தி.மு.க. மூத்த முன்னோடிகள் 1,000 பேருக்கு தலா ரூ.1,000 பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

"வீட்டை சுத்தம் செய்ய குப்பை, விஷப்பாம்பை அகற்ற வேண்டும்"

இந்த கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் மேலும் கூறுகையில், 'கலைஞர் முன்பு ஒரு கதை கூறினார். நாம் நமது வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு சுத்தம் செய்யும் போது வீட்டிற்குள் ஒரு விஷப்பாம்பு வந்தால் அதை கட்டையால் அடித்து விடுவோம். அந்த பாம்பு ஓடிவிடும். மறுநாள் மீண்டும் அதே பாம்பு வீட்டுக்குள் வந்து மறைந்து கிடக்கிறது. எப்படி என்று பார்த்தால் வீட்டில் வெளியே குப்பை கிடக்கிறது. அந்த குப்பை வழியாக இந்த பாம்பு வீட்டுக்குள் வந்துள்ளது.

விஷப்பாம்பு என்பது பா.ஜ.க., குப்பை என்பது அ.தி.மு.க. என்ற அடிமைகள். பாசிச ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்றால் முதலில் குப்பையை அகற்ற வேண்டும். பின்பு பாம்பை ஓட, ஓட விரட்டி அடிக்க வேண்டும். எனவே 2024 தேர்தலில் நாம் வெற்றி பெற சேலம் மாநாட்டை நீங்கள் சிறப்பாக நடத்தி காட்ட வேண்டும்' என்றார்.


Related Tags :
Next Story