கருவூல ஜெர்சி பண்ணையில் அமைச்சர் ஆய்வு
ஊட்டியில் உள்ள கருவூல ஜெர்சி பண்ணையில் அமைச்சர் நாசர் ஆய்வு செய்தார்.
ஊட்டி,
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் கருவூல ஜெர்சி மற்றும் பொலிகாளை பண்ணை ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் உள்ளது. இந்த பண்ணையை நேற்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பண்ணையின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதன் பின்னர் அமைச்சர் நாசர் நிருபர்களிடம் கூறியதாவது:- பண்ணையில் உயர் ரக ஜெர்சி, ப்ரீசியன், கலப்பு இன காளைகள் என மொத்தம் 122 காளைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. 44 விந்து சேகரிப்பு பொலிகாளைகளில் இருந்து மாதத்திற்கு 70,000 முதல் 75,000 வரை உறைவிந்து குச்சி உற்பத்தி செய்யப்படுகிறது. இவை பல்வேறு தர ஆய்வுகளுக்கு பின் திரவ நைட்ரஐனில் பாதுகாக்கப்பட்டு, ஈரோட்டில் உள்ள எருமையின உறைவிந்து நிலைய வினியோக மையத்திற்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து தமிழகத்தில் உள்ள 25 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் உள்ள கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டலுக்காக விற்பனை செய்யப்படுகிறது. இந்த செயற்கை முறை கருவூட்டல் பசுக்களின் பால் உற்பத்தி திறனை பெருக்க உதவுகிறது. அதிக உற்பத்தி திறன் மூலம் பால் உற்பத்தியாளர்கள் நல்ல லாபத்தினை பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.