பரமன்குறிச்சி சமத்துவபுரத்தில் அமைச்சர்கள் ஆய்வு
பரமன்குறிச்சி சமத்துவபுரத்தில் அமைச்சர்கள் பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
உடன்குடி:
உடன்குடி யூனியன் பரமன்குறிச்சி அருகே பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. இங்குள்ள வீடுகள், சமுதாய நலக்கூடம், பூங்கா, ரேஷன் கடை, பெரியார் சிலை மற்றும் தார் சாலை உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை தேவைக்கான அனைத்தும் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங், திருச்செந்தூர் தாசில்தார் சாமிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செழியன், தி.மு.க. மாணவரணி துணைச் செயலாளர் உமரி சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
உடன்குடி யூனியன் மாதவன்குறிச்சி பஞ்சாயத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீத குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டதையொட்டி, பஞ்சாயத்து தலைவர் சேர்மதுரைக்கு அமைச்சர்கள் பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் பாராட்டு சான்றிதழ் வழங்கினர். அப்போது ஊரக வளர்ச்சி துறை ஆணையாளர் தாரேஸ்அகமது, வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செழியன் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.