அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கண்ணியத்துடன் செயல்பட வேண்டும் -முதல்-அமைச்சர் அறிவுரை


அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கண்ணியத்துடன் செயல்பட வேண்டும் -முதல்-அமைச்சர் அறிவுரை
x

‘‘அமைச்சர்கள், எம்.பி.க் கள், எம்.எல்.ஏ.க்கள் கண்ணியத்துடன் செயல்பட வேண்டும். சொல்லிலும், செயலிலும் அலட்சியம் கூடாது’’ என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தி.மு.க.வின் 15-வது அமைப்பு தேர்தல் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழகங்கள் என அனைத்து நிலைகளிலும் நிறைவுபெற்று நிர்வாகிகள் தேர்வு பெற்றுள்ளனர். தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பொதுக்குழு கூட்டம் வருகிற 9-ந் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. கட்சி தலைவர் என்ற பொறுப்பை, கண்ணுங் கருத்துமாக, எனது இதயத்திலும், தோளிலும் சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான நான், தொண்டர்களின் உளமார்ந்த வாழ்த்துகளையும், ஒருமனதான நல்லாதரவையும் எதிர்நோக்கி, வருகிற 7-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளேன்.

அண்ணா உருவாக்கி, கருணாநிதி சுமார் அரை நூற்றாண்டு அரும்பாடுபட்டுக் கட்டிக்காத்த இயக்கம் தி.மு.க. மாநில கட்சியாக இருந்தாலும், உள்கட்சி ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில், இந்தியாவில் உள்ள கட்சிகள் பலவற்றுக்கும் எப்போதும் வழிகாட்டியாக இருப்பது தி.மு.க.

திராவிட மாடல் ஆட்சித்திறனை...

கட்சியின் உள்கட்டமைப்பு ஜனநாயக முறைப்படி ஒழுங்குபடுத்தப்பட்டு, கண்ணை இமை காப்பதுபோல், தொடர்ந்து காக்கப்படுவதால்தான், வலிவோடும் பொலிவோடும் திகழ்ந்து, இன்று தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பில் இருப்பதுடன், நம்முடைய திராவிட மாடல் ஆட்சித்திறனை, இந்தியாவின் பிற மாநிலங்களும் ஏற்று போற்றிப் பாராட்டுகின்ற வகையில் சீராகச் செயலாற்றி வருகிறது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் சிறப்பான பங்களிப்பை இந்தியாவே எதிர்பார்த்திருக்கிறது.

தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு பெற்றுவரும் வளர்ச்சியையும், வலிமையையும் சற்றும் பொறுத்துக்கொள்ள முடியாத சில பிற்போக்கு சக்திகள், கட்சி தேர்தல் முடிவுகள் குறித்து, தங்களது கற்பனை எல்லையைக் காட்டும் வகையில் சில வேலையில் ஈடுபட்டு வருகின்றன.

கவனமுடன் செயல்பட வேண்டும்

கட்சி அமைப்புகளில் உள்ள பொறுப்புகளுக்கு போட்டியிட விரும்புகிறவர்கள் தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தி மனு தாக்கல் செய்வது வழக்கம். ஒரு மாவட்டத்துக்கு ஒரு செயலாளர்தான் என்பதை மனு தாக்கல் செய்த ஒவ்வொருவருமே அறிவார்கள். தேவையென்றால் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறுவதும், அதற்கான அவசியம் ஏற்படாத நிலையில், ஒருமனதாக ஒருவரை தேர்வு செய்வதும் கருணாநிதி உருவாக்கிய வழிமுறையின்படி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த அரசுக்கு எப்படியாவது ஊறு விளைவித்திட வேண்டும் என நினைப்போரை சரியாக அடையாளம் கண்டு நாம் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் செயலாற்றிட வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை விளைவதைப் பார்த்துப் பொறுத்துக்கொள்ள முடியாத பொல்லாங்கு எண்ணம் கொண்டோர், நமக்கு எதிராக சிறு துரும்பையும் பெரும் தூணாக்க முடியுமா என துடித்துக்கொண்டிருக்கிறார்கள். சிறு துரும்புக்கு மட்டுமல்ல, தூசுக்கும்கூட இடம் கொடுக்காத வகையில், நாம் கவனமுடன் செயல்பட வேண்டியுள்ளது.

எதிரிகளுக்கு துணைபோக கூடாது

எனவே அமைச்சர்களும், எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும், உள்ளாட்சி பொறுப்பிலே இருக்கக்கூடிய நிர்வாகிகளும் எக்காரணம் கொண்டும் சொல்லிலும், செயலிலும் அலட்சியமான போக்கு காட்ட வேண்டாம். இரண்டையும் கவனத்துடன் கையாளுங்கள். நம்மிடமிருந்து வெளிப்படும் சொற்கள், அதனை வெளிப்படுத்தும் உடல்மொழி, நம்மை நாடி வரும் மக்களை அணுகும் முறை என அனைத்திலும் கவனமுடனும், பொறுப்புடனும், கண்ணியம் துளியும் குறைந்து விடாமல் செயலாற்றுங்கள்.

நம் தரப்பிலிருந்து தவறுகளுக்கோ, குறைகளுக்கோ குன்றிமணி அளவுகூட இடம் தரக்கூடாது. அப்படி ஏதேனும் ஒன்றிரண்டு நிகழ்வுகள் என் கவனத்திற்கு வந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுத்திட சிறிதும் தயங்க மாட்டேன். அரும்பாடுபட்டு அமைந்துள்ள மக்கள் நல ஆட்சிக்கு, அவப்பெயர் ஏற்படுத்த நினைக்கும் எதிரிகளுக்கு கட்சியினர் யாரும் எள்ளளவும் துணைபோக மாட்டீர்கள் என உறுதியாக நம்புகிறேன்.

வெற்று புழுதியை கிளப்பி...

நமது அரசின் செயல்பாடுகளில் திட்டமிட்டு தடங்கலை உருவாக்க சில அரசியல் கட்சிகளும், அவர்களின் பின்னணி குரலாக செயல்பட நினைப்போரும் காத்திருக்கிறார்கள். நாம் பேசுகிற நீண்ட பேச்சில், தொடர்பில்லாமல் ஒரு சிறிய துண்டை மட்டும் எடுத்து, அதிலும் வெட்டி-ஒட்டி, திரித்து மோசடி செய்து, வெற்று புழுதியைக் கிளப்பி, அதனை எதிர்ப்பு புயல் என நம்பவைக்க நினைக்கிறார்கள். அவர்களின் கற்பனையிலும், கனவிலும்தான் புழுதிமண் விழும். விழ வேண்டும். அதற்கேற்ப உங்களின் சொற்களும், செயல்களும் கவனம் குறையாத வகையில் அமைந்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story