திருச்சியில் 1,115 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர்கள் வழங்கினர்
திருச்சியில் 1,115 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.
திருச்சி கலையரங்கத்தில் நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் திருச்சி மாவட்டத்தில், உட்கட்டமைப்பு, மனிதவளம், சுற்றுச் சூழல், நீர், நிலவளம் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு எதிர் வரும் 10 ஆண்டுகளுக்கான மக்களின் தேவைகள், திட்டங்கள், சாலை உட்கட்டமைப்பு, போக்குவரத்து, வேளாண்மை, தொழில் வளம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மேம்பாடுகள் குறித்து தயாரிக்கப்பட்ட தொலைநோக்குத் திட்ட ஆவணத்தை அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வெளியிட்டார்கள்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 193 பயனாளிகளுக்கு ரூ.16 கோடியே 41 லட்சம் மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையையும், வருவாய்த் துறையின் சார்பில் 20 திருநங்கைகளுக்கு, ரூ.8 லட்சம் மதிப்பிலான வீட்டு மனை பட்டாக்களையும், இயற்கை இடர்பாடு நிதியின் கீழ் 1 நபருக்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 100 ேபர்களுக்கு ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணையும். என பல்வேறு திட்டங்களில் மொத்தம் 1,115 பயனாளிகளுக்கு ரூ.17 கோடியே 99 லட்சம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், எம்.எல்.ஏ.க்கள் தியாகராஜன், இனிகோ இருதயராஜ், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்