மாவட்டத்தில்கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு வந்த அமைச்சுப் பணியாளர்கள்


மாவட்டத்தில்கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு வந்த அமைச்சுப் பணியாளர்கள்
x
தினத்தந்தி 20 April 2023 12:15 AM IST (Updated: 20 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் நேற்று கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

கடலூர்

கூடுதல் பணியிடங்கள்

புதிதாக பிரிக்கப்பட்டுள்ள ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கும், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களுக்கும் கூடுதல் அமைச்சு பணியிடங்கள் வழங்குவதற்கு ஆணை வழங்கிட வேண்டும். காவல்துறை குடியிருப்புகளில் அமைச்சுப் பணியாளர்களுக்கு 10 சதவீதம் குடியிருப்பு வழங்க வேண்டும். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்படும் அமைச்சுப் பணியாளர்களுக்கு ஈட்டுப்படி வழங்கிட வேண்டும்.

முழு உடல் மருத்துவ பரிசோதனை திட்டத்தினை அமைச்சுப் பணியாளர்களுக்கும் விரிவுபடுத்த ஆணை வழங்கிட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் கோரிக்கை அட்டை அணிந்து 3 நாட்கள் பணியில் ஈடுபடுவது என முடிவு செய்திருந்தனர்.

கோரிக்கை அட்டை

அதன்படி கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர் சங்க மாநில பொருளாளர் சதிஷ் தலைமையில் கிளை தலைவர் சுரேஷ்குமார் முன்னிலையில் அமைச்சுப் பணியாளர்கள் நேற்று காலை கோரிக்கை அட்டை அணிந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு பணிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கோரிக்கை அட்டை அணிந்தபடியே வழக்கம் போல் பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலைய அலுவலகங்களின் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் 126 பேர் நேற்று கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) அமைச்சுப் பணியாளர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட உள்ளனர்.


Next Story