பொருளாதார மேம்பாட்டு கடனுதவி பெற சிறுபான்மையின மக்கள் விண்ணப்பிக்கலாம்
பொருளாதார மேம்பாட்டு கடனுதவி பெற சிறுபான்மையின மக்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்களுக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடனுதவிகள் வழங்கப்படுகிறது. தனி நபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சம் வழங்கப்படுகிறது. குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேலும் ஆண்டிற்கு ஆண்களுக்கு 8 சதவீதம் வட்டி விகிதத்திலும், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30 லட்சம் வழங்கப்படும். இதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிகபட்ச ரூ.10 லட்சம் கடனுதவி வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழு கடன் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சமும், 7 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதமும், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டியிலும் நபர் ஒருவருக்கு ரூ.1½ லட்சம் கடன் வழங்கப்படுகிறது. சிறுபான்மையின மாணவ- மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி பயில்பவர்களுக்கு அதிக பட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20 லட்சம் வரையில் 3 சதவீத வட்டியிலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்திலும் ரூ.30 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படுகிறது. எனவே, பெரம்பலூர் மாவட்ட சிறுபான்மையினர் மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், பெரம்பலூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், அருகே உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்கத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்து உள்ளார்.