சிறுபான்மையினர் நல ஆய்வுக்கூட்டம்


சிறுபான்மையினர் நல ஆய்வுக்கூட்டம்
x

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சிறுபான்மையினர் நல ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர்கள் இ.பெரியசாமி, செஞ்சி.மஸ்தான் ஆகியோர் பங்கேற்றனர்.

திண்டுக்கல்

ஆய்வுக்கூட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சிறுபான்மையினர் நல ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி.மஸ்தான் ஆகியோர் தலைமை தாங்கினர்.

அயலக நல்வாழ்வு நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மாவட்ட கலெக்டர் விசாகன், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், வேலுச்சாமி எம்.பி., பழனி எம்.எல்.ஏ. இ.பெ.செந்தில்குமார், வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இடர்பாடு ஏற்பட்டால்...

கூட்டத்தில் அமைச்சர் இ.பெரியசாமி பேசுகையில், தோட்டனூத்து கிராமத்தில் ரூ.17 கோடியே 17 லட்சத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதுதவிர சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தி வருகிறார்.

திண்டுக்கல் மட்டுமின்றி மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும் மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏதேனும் இடர்பாடு ஏற்பட்டால் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அதனை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தனி அலுவலர்கள்

அவரை தொடர்ந்து அமைச்சர் செஞ்சி. மஸ்தான் பேசும்போது கூறியதாவது:-

திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்தில் இலங்கை அகதிகளுக்காக புதிதாக 321 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிந்து வீடுகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். சிறுபான்மையினர் நலனை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தனி அலுவலர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.

கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் சீரமைப்பு பணிக்காக அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. பள்ளிவாசல்கள் சீரமைப்புக்காக ரூ.5 கோடியே 10 லட்சமும், தேவாலயங்கள் சீரமைப்புக்காக ரூ.1 கோடி வரையும் இதுவரை நிதி ஒதுக்கப்பட்டு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் உலமாக்கள் நலவாரிய உறுப்பினர்கள் 10 ஆயிரத்து 518 பேருக்கு மிதிவண்டிகள் மற்றும் ரூ.25 ஆயிரம் மானியத்தில் இருசக்கர வாகனங்களும் வழங்கப்பட உள்ளது.

அத்தியாவசிய பொருட்கள்

இலங்கையில் தற்போது பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு சார்பில் ரூ.163 கோடி மதிப்பிலான அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2-ம் கட்டமாக தூத்துக்குடியில் இருந்து அத்தியாவசிய பொருட்களை அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விஜயராணி, கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் காந்திநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக அமைச்சர்கள் இ.பெரியசாமி, செஞ்சி மஸ்தான் மற்றும் அதிகாரிகள், தோட்டனூத்துவில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Next Story