டாஸ்மாக் பாருக்கு தீவைத்த மர்மநபர்கள்
ஓட்டப்பிடாரம் அருகே டாஸ்மாகில் கொள்ளையடிக்க முடியாத ஆத்திரத்தில் செயல்படாத பாருக்கு மர்மநபர்கள் தீவைத்து சென்றனர்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே டாஸ்மாகில் கொள்ளையடிக்க முடியாத ஆத்திரத்தில் செயல்படாத பாருக்கு மர்மநபர்கள் தீவைத்து சென்றனர்.
பாருக்கு தீவைப்பு
ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குச்சாலையில் இருந்து சந்திரகிரி கிராமத்திற்கு செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அந்த டாஸ்மாக் கடையில் செயல்பட்டு வந்த பார் தற்போது இயங்கவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுப்பதற்காக சென்றனர். ஆனால் கடையை உடைத்து திருட முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் பகுதியில் கீழே கிடந்த அட்டைப்பெட்டிகளை எடுத்து செயல்படாமல் இருக்கும் பார் மேற்கூரை மீது வீசி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் செயல்படாத பார் முற்றிலுமாக தீ பற்றி கருகி சேதம் அடைந்தது.
ரூ.5 லட்சம் தப்பியது
இந்த நிலையில் நேற்று மதியம் கடையை திறக்க வந்த டாஸ்மாக் ஊழியர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் ஓட்டப்பிடாரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மர்மநபர்களின் கொள்ளை முயற்சி தோல்வி அடைந்ததால் ரூ.5 லட்சம் தப்பியது.