போடியில் பரிதாபம்: ஆற்றில் மூழ்கி புதுமண தம்பதி உள்பட 3 பேர் பலி: விருந்துக்கு வந்த இடத்தில் சோகம்
போடியில் குளிக்க சென்றபோது, ஆற்றில் மூழ்கி புதுமண தம்பதி உள்பட 3 பேர் பலியாகினர். விருந்துக்கு வந்த இடத்தில் நடந்த இந்த சோக சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
புதுமண தம்பதி
தேனி அருகே உள்ள பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது 30). மருந்து விற்பனை பிரதிநிதி. அவருடைய மனைவி காவியா (20). இவர்களுக்கு கடந்த மாதம் திருமணம் நடந்தது.
புதுமண தம்பதியான இவர்கள், கடந்த 2 நாட்களுக்கு முன்பு போடி புதுக்காலனியில் உள்ள ராஜாவின் அக்காள் உமாமகேஸ்வரி வீட்டுக்கு விருந்துக்கு வந்தனர். நேற்று முன்தினம் இவர்கள் 2 பேரும், போடிமெட்டு பகுதியை சுற்றி பார்ப்பதற்காக காரில் சென்றனர். பின்னர் அங்குள்ள இடங்களை பார்த்து விட்டு மாலை வீட்டுக்கு திரும்பினர்.
ஆற்றில் குளியல்
இந்தநிலையில் நேற்று போடி அருகே உள்ள பெரியாற்று கோம்பையாற்றில் ராஜாவும், காவியாவும் குளிக்க சென்றனர். இவர்களுடன் உமாமகேஸ்வரியின் மகன் பிரணவ் (12), ராஜாவின் மைத்துனர் சஞ்சய்குமார் (24) ஆகியோரும் சென்றனர். சஞ்சய்குமார், முதலில் ஆற்்றில் இறங்கி ஆனந்தமாய் குளித்து கொண்டிருந்தார்.
கடந்த சில நாட்களாக போடி பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாகி சுழல் ஏற்பட்டது. இந்த சுழலில் சஞ்சய்குமார் சிக்கிகொண்டார். இதனால் அவர் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அலறினார்.
சிறுவன் கண்முன்னே துயரம்
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜா, ஆற்றில் குதித்து சஞ்சய்குமாரை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரும் சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார். தனது கண் எதிரே கணவரும், சஞ்சய்குமாரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதை அறிந்த காவியா கதறினார்.
பின்னர் அவர்களை காப்பாற்றுவதற்காக காவியாவும் ஆற்றில் குதித்தார். ஆனால் தண்ணீர் அதிகமாக சென்றதால் அவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். அடுத்தடுத்து 3 பேரும் தன் கண் முன்னே ஆற்றில் விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதை கண்ட பிரணவ் செய்வதறியாது திகைத்தான்.
3 உடல்கள் மீட்பு
இதுகுறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு சிறுவன் பிரணவ் தகவல் தெரிவித்தான். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு குரங்கணி போலீசாா் மற்றும் போடி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர்.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறக்கி 3 பேரையும் தேடினர். சுமார் ½ மணி நேர தேடுதலுக்கு பிறகு தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதையடுத்து போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த அவர்களது உறவினர்கள், இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
லண்டன் என்ஜினீயர்
தண்ணீரில் மூழ்கி பலியான சஞ்சய்குமார் லண்டனில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு தான், அவர் விடுமுறையில் போடிக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆற்றில் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி, புதுமண தம்பதி உள்பட 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.