பெண் ஊழியர் தவறிவிட்ட 10 பவுன் நகை ஒப்படைப்பு


பெண் ஊழியர் தவறிவிட்ட 10 பவுன் நகை ஒப்படைப்பு
x

நாட்டறம்பள்ளி அருகே பெண் ஊழியர் தவறிவிட்ட 10 பவுன் நகையை போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.

திருப்பத்தூர்

சென்னை கோவிலம்பாக்கம் பூபதி நகர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் பிரபு. இவரது மனைவி வைஷ்ணவி (வயது 25). இருவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். கடந்த 11-ந் தேதி பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் குடும்பத்துடன் சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்தனர்.நாட்டறம்பள்ளி அருகே வந்தபோது டீ குடிப்பதற்காக ஆத்தூர் குப்பம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் காரை நிறுத்தினர். அப்போது வைஷ்ணவி 9 பவுன் தாலி செயின், கம்மல் மற்றும் விக்னேஷ் பிரபுவின் அடையாள அட்டை, விலையுயர்ந்த செல்போன் ஆகியவற்றை மணிபர்சில் எடுத்து சென்றபோது கழிவறையில் கவனக்குறைவாக வைத்து விட்டார்.

பின்னர் டீ குடித்து விட்டு அங்கிருந்து காரில் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றனர். சென்னை அருகே செல்லும் போது தான் மணி பர்ஸ் காணமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு சென்று வைஷ்ணவி புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மலர், சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, புகார் கொடுத்த 24 மணி நேரத்திற்குள் காணமல் போன 10 பவுன் நகை மற்றும் செல்போன் ஆகியவற்றை மீட்டு உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர். இதனை பெற்றுக் கொண்ட தம்பதியினர் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.


Next Story