தஞ்சையில் தவறவிட்ட 6 பவுன் நகை உரியவரிடம் ஒப்படைப்பு


தஞ்சையில் தவறவிட்ட 6 பவுன் நகை உரியவரிடம் ஒப்படைப்பு
x

தஞ்சையில் வங்கியில் அடகு வைத்த நகையை திருப்பி எடுத்து வந்த போது டிரைவர் தவறவிட்டார். அதனை எடுத்த மெக்கானிக், உரியவரிடம் ஒப்படைத்தார். அவரை போலீசார் பாராட்டினர்.

தஞ்சாவூர்

தஞ்சையில் வங்கியில் அடகு வைத்த நகையை திருப்பி எடுத்து வந்த போது டிரைவர் தவறவிட்டார். அதனை எடுத்த மெக்கானிக், உரியவரிடம் ஒப்படைத்தார். அவரை போலீசார் பாராட்டினர்.

டிரைவர்

தஞ்சை பால்பண்ணை அருகே உள்ள சிராஜ்பூர் நகரை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது45). இவர் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் தஞ்சை தெற்கு வீதியில் உள்ள ஒரு வங்கியில் வளையல், கம்மல் உள்ளிட்ட 6 பவுன் நகைகளை அடகு வைத்து இருந்தார். இந்த நகைகளை அடகில் இருந்து மீட்பதற்காக நேற்று வங்கிக்கு சென்றார்.பின்னர் வங்கியில் இருந்து திருப்பிய நகையை ஒரு கவரில் வைத்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார். தஞ்சை காந்திஜிசாலையில் வந்த போது ஒரு டீக்கடையில் நின்று டீ குடித்தார். அப்போது பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்த போது நகையும் கீழே விழுந்துள்ளது. அதனை கவனிக்காத பிரபாகரன் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டார். வீட்டின் அருகே சென்றதும் பாக்கெட்டில் இருந்த நகையை காணாது திடுக்கிட்டார்.

போலீசார் பாராட்டு

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபாகரன், நகை எங்காவது கீழே விழுந்து விட்டாதா? என தான் வந்த வழியே தேடிக்கொண்டு வந்தார். அப்போது டீக்கடைக்கு வந்து அங்கிருந்தவர்களிடம் கேட்டார். அப்போது கீழே கிடந்த நகையை, தஞ்சை மானம்புச்சாவடியை சேர்ந்த மெக்கானிக் காதர் என்பவர் எடுத்து, தஞ்சை கிழக்கு போலீசில் ஒப்படைத்தது தெரிய வந்தது. இதையடுத்து பிரபாகரன் அங்கு சென்று, நகை தன்னுடையது தான் என்பதை உறுதி செய்தார்.

இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார் முன்னிலையில் காதர் நகையை பிரபாகரனிடம் ஒப்படைத்தார். நகையை உரியவரிடம் ஒப்படைத்த காதரை, போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர். நகையின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.


Next Story