கும்மிடிப்பூண்டி அருகே மாயமான 10-ம் வகுப்பு மாணவி ஏரியில் பிணமாக மீட்பு


கும்மிடிப்பூண்டி அருகே மாயமான 10-ம் வகுப்பு மாணவி ஏரியில் பிணமாக மீட்பு
x

கும்மிடிப்பூண்டி அருகே காணாமல் போன பள்ளி மாணவி ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது சாவை சந்தேக சாவாக பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்

ஏரியில் மாணவி உடல்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் திலகா. இவரது மகள் உஷா (வயது 16). இவர், பெரியபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில மாதங்களாக முறையாக உஷா பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 12-ந்தேதி வீட்டில் இருந்து உஷா மாயமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இந்த நிலையில் நேற்று பாதிரிவேடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கொள்ளானூர் அருகே உள்ள ஆராமணி ஏரியில், உஷாவின் உடல் மிதப்பதாக தகவல் பரவியது.

சந்தேக சாவாக வழக்கு

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பாதிரிவேடு போலீசார் ஏரியில் பிணமாக மிதந்தது காணாமல் போன பள்ளி மாணவி உஷா என்பதனை உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்தில் இருந்து உஷாவின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக மீட்கப்பட்ட உஷாவின் கழுத்தில் காயம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 2 நாட்களுக்குள் மாணவி உஷா இறந்திருக்ககூடும் எனவும், சாவில் மர்மம் இருப்பதாகவும் போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் பாதிரிவேடு போலீசார் சந்தேக சாவாக வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story