காணாமல் போன மாணவி கிணற்றில் பிணமாக மீட்பு
வெம்பாக்கம் அருகே காணாமல் போன மாணவி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூசி
வெம்பாக்கம் அருகே காணாமல் போன மாணவி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவி மாயம்
திருவண்ணாமலையில் மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா சித்தாத்தூர் அருகே உள்ள திருவடி ராயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சபாபதி, கூலி தொழிலாளி. இவரது மகள் அபிநயா (வயது 14). இவர் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி வீட்டு வேலை செய்யவில்லை என்று இவரது சகோதரர் பூவரசன் கண்டித்துள்ளார். இதனால் அவர் கோபித்து கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதையடுத்து மாணவியின் தாயார் தெய்வானை தூசி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.
கிணற்றில் பிணமாக மீட்பு
இந்த நிலையில் நேற்று அதே பகுதியில் ஒரு கிணற்றில் மாணவியின் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கிணற்றில் பிணமாக கிடந்தது அபிநயா என்பது தெரிந்தது.
இதையடுத்து போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.