காணாமல்போன தூத்துக்குடி தொழிலாளி 23 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு
காணாமல்போன தூத்துக்குடியை சேர்ந்த தொழிலாளி 23 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீட்கப்பட்டார். எங்களுடைய பிரார்த்தனை வீண்போகவில்லை என்று அவரது மகன் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கனியம் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 46). இவர் அப்பகுதியில் கிணறு வெட்டும் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், தாமஸ் என்ற மகனும் உள்ளனர்.
கடந்த 1999-ம் ஆண்டில் வீட்டை விட்டு வெளியே சென்ற வேல்முருகன், அதன் பிறகு வீடு திரும்பவே இல்லை. அவரை பல்வேறு இடங்களில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தேடிப்பார்த்தும் எந்தவொரு தகவலும் தெரியவில்லை.
இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னை குரோம்பேட்டை பகுதியில் சுற்றித்திரிந்த ஒருவரை பசியில்லா தமிழகம் என்ற அமைப்பினர் மீட்டு விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்தில் சேர்த்தனர். பின்னர் அவருக்கு முடிதிருத்தம், முக சவரம் செய்து குளிக்க வைத்து உரிய சிகிச்சை அளித்துள்ளனர். அவரிடம் பேச்சு கொடுத்தபோது அவர், தன்னுடைய பெயர் வேல்முருகன், தன்னுடைய ஊர் ஆறுமுகநேரி என்றும் தனது பெற்றோர் செல்லத்துரை, குருவம்மாள் என்று மட்டும் மாறி, மாறி கூறி வந்துள்ளார், மற்ற எந்தவொரு விவரமும் அவருக்கு தெரியவில்லை.
சமூகவலைதளங்களில் வீடியோ
இதையடுத்து வேல்முருகனை புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தையும், அவரது பெயர், ஊர் விவரத்தையும், தற்போது விழுப்புரத்தில் இருக்கும் இடம் குறித்தும் சமூகவலைதளங்களில் வீடியோவாக பதிவிட்டுள்ளனர்.
இதை பார்த்த வேல்முருகனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அடையாளம் கண்டு அவரது மகன் தாமசுக்கு தெரிவித்தனர். 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன தனது தந்தை கிடைத்து விட்டதால் தாமஸ் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
இதையடுத்து தந்தையை பார்க்க தாமஸ், தனது சித்தப்பா செல்வராஜிடன் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் வந்தடைந்தார். பின்னர் அங்குள்ள ஆசிரமம் சென்று தந்தை வேல்முருகனை பார்த்த மகிழ்ச்சியில் கண்ணீர் மல்க அவரை கட்டியணைத்தார். பின்னர் மாவட்ட கலெக்டர் மோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோரின் முன்னிலையில் வேல்முருகனை அவரது குடும்பத்தினரிடம் ஆசிரம ஊழியர்கள் ஒப்படைத்தனர்.
மகன் நெகிழ்ச்சி
இதுகுறித்து தாமஸ் நெகிழ்ச்சியுடன் கூறுகையில், நான் 3-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது எனது தந்தை காணாமல் போய்விட்டார். அவரை இத்தனை ஆண்டுகாலம் பல இடங்களில் நாங்கள் தேடி வந்தோம், அவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பதையும் அறிய முடியாமல் தவித்தோம். இருப்பினும் என்றைக்காவது ஒரு நாள் எனது தந்தை கிடைத்து விடுவார் என்ற நம்பிக்கையில் ஆண்டவனிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்தோம். இந்த சூழலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு எனது தந்தை கிடைத்திருப்பது எல்லையில்லா மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.