காணாமல்போன பெண் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு


காணாமல்போன பெண் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு
x

கறம்பக்குடி அருகே காணாமல்போன பெண் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

கணவர் மலேசியாவில் வேலை

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள தெற்கு பல்லவராயன் பத்தை கிராமத்தை சேர்ந்தவர் திருச்செல்வம். இவர் கடந்த 1½ ஆண்டுகளாக மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 35). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 4 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 23-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற பழனியம்மாள் பின்னர் வீடு திரும்பவில்லை.

குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் பழனியம்மாள் கிடைக்கவில்லை. இதையடுத்து பழனியம்மாளின் தந்தை தங்கவேல் கறம்பக்குடி போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனியம்மாளை தேடி வந்தனர்.

அழுகிய நிலையில் பெண் உடல்

இந்நிலையில் நேற்று காலை பல்லவராயன்பத்தை ஊராட்சி தொம்பரான்பட்டி கிராமத்தில் உள்ள தைலமரக்காட்டில் உடைகள் அலங்கோலமாக அழுகிய நிலையில் ஒரு பெண் சடலமாக கிடப்பதாக கறம்பக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அந்த பெண் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட அந்த பெண் கடந்த 5 நாட்களுக்கு முன்பு காணாமல் போன பழனியம்மாள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பழனியம்மாளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

சாலை மறியல்

இதையடுத்து பழனியம்மாள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை யாரோ கொலை செய்து இங்கு போட்டு சென்றிருப்பதாகவும் கூறி குற்றவாளிகளை கைது செய்யும் வரை பிணத்தை எடுக்க விடமாட்டோம் என தெரிவித்து கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் புதுப்பட்டி முக்கத்தில்அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. சாலையின் 3 பகுதிகளிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை உதவி கலெக்டர் முருகேசன், ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக் ரஜினி மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டிருந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பழனியம்மாள் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் குற்றம் நடந்திருந்தால் நிச்சயம் குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் பழனியம்மாளின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் கறம்பக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story