குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்
மயிலாடுதுறையில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என நகர் மன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மயிலாடுதுறையில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என நகர் மன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நகர்மன்ற கூட்டம்
மயிலாடுதுறை நகர்மன்ற கூட்டம் அதன் அவை கூடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு நகரசபை தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். ஆணையர் செல்வபாலாஜி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:-
கார்த்திக் (தி.மு.க.):-நகராட்சி எல்லைக்குள் குறைவான சதுர அடியில் கட்டிடம் கட்ட அனுமதி பெற்றவர்கள், அதைவிட அதிகமான அளவில் கட்டிடங்களை எழுப்புகின்றனர். இதனால் நகராட்சிக்கு வரி இழப்பு ஏற்படுகிறது. வண்ணான் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
நாய்கள் தொல்லை
ஜெயலட்சுமி (தி.மு.க.):- எனது வார்டில் குடிநீரில் சாக்கடைகழிவு நீர் கலந்து வருவதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
ரஜினி (தி.மு.க.):- கடந்த நகர மன்ற கூட்டத்தில் விடுத்த வேண்டுகோளை ஏற்று முதல் 200 வரி நிலுவையாளர்களை அழைத்து கூட்டம் நடத்தியதற்கு நன்றி. இதன் விளைவாக நகராட்சிக்கு கடந்த 10 நாட்களில் வரி வருவாய் அதிகரித்துள்ளது.
ராஜலட்சுமி (தி.மு.க.):- ராஜலட்சுமி நகரின் பல்வேறு இடங்களில் நாய் தொல்லை அதிகரித்து உள்ளது. உடனடியாக மருத்துவ முகாம் நடத்தி நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தவும், கருத்தடை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடற்பயிற்சி கூடம்
சதீஷ்குமார் (அ.தி.மு.க.):-நகராட்சி சார்பில் இளைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் உடற்பயிற்சி கூடம் அமைத்து தர வேண்டும்.
ரத்தினவேல் (தி.மு.க.): எடத்தெரு- திருமஞ்சன வீதி சந்திப்பில் உள்ள வடிகால் மீது அமைக்கப்பட்டுள்ள சிறு பாலத்தை சீரமைக்க வேண்டும்.
ராமச்சந்திரன் (அ.தி.மு.க.): எனது வார்டில் 5-க்கும் மேற்பட்ட மினி நீர் தேக்க தொட்டியின் பம்புகள் மற்றும் மோட்டார்கள் பழுதடைந்துள்ளன. அதனை சீரமைக்க வேண்டும்.
கீதா (தி.மு.க.):- கீழ உடையார் தெரு பகுதியில் ஈமச்சடங்கு மண்டபம் கட்டித் தர வேண்டும். பணஞ்சாரி சாலையில் மினி பம்ப் ஹவுஸ் அமைத்து தர வேண்டும்.
குடிநீர் குழாய் உடைப்பு
காந்தி (பா.ம.க):- திம்மநாயக்கன் படித்துறையில் உள்ள சுடுகாட்டில் தண்ணீர் பம்பு பழுதடைந்துள்ளது. அதனை பழுது நீக்க வேண்டும்.
ரிஷிகுமார் (தி.மு.க.):- கால் டெக்ஸ் பகுதியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இதை சரி செய்ய வேண்டும்..
கணேசன் (ம.தி.மு.க.): மயிலாடுதுறை நகரம் முழுவதும் பாதாள சக்கடை கழிவுநீர் வெளியேறி சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
முடிவில் நகரசபை உறுப்பினர் ரத்தினவேலு நன்றி கூறினார்.