பெரும்பள்ளம் ஓடையில் சாக்கடை கழிவுநீர் கலப்பதை முழுமையாக தடுக்க வேண்டும்; பொதுமக்கள் எதிர்பார்ப்பு


பெரும்பள்ளம் ஓடையில் சாக்கடை கழிவுநீர் கலப்பதை முழுமையாக தடுக்க வேண்டும்;  பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x

பெரும்பள்ளம் ஓடையில் சாக்கடை கழிவுநீர் கலப்பதை முழுமையாக தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஈரோடு

பெரும்பள்ளம் ஓடையில் சாக்கடை கழிவுநீர் கலப்பதை முழுமையாக தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பெரும்பள்ளம் ஓடை

ஈரோடு மாநகர் பகுதியில் பெரும்பள்ளம், பிச்சைக்காரன்பள்ளம் ஓடை, சுண்ணாம்பு ஓடை ஆகிய 3 முக்கிய ஓடைகள் செல்கிறது. இதில் பெரும்பள்ளம் ஓடை மிகவும் முக்கியத்துவம் பெற்றது. இந்த ஒடையின் குறுக்கே சூரம்பட்டி பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. அங்கிருந்து நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலுக்கு பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

பெரும்பள்ளம் பகுதியில் இருந்து தொடங்கும் இந்த ஓடை மாநகர் பகுதியில் 12 கிலோ மீட்டர் தூரம் பயணித்து காவிரி ஆற்றில் நிறைவடைகிறது. இதில் பெரும்பாலான இடங்களில் புதர்மண்டி காணப்பட்டது. மேலும், மாநகர் பகுதியில் செல்லும் ஓடையில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வந்தனர். இதனால் ஓடை சுகாதாரமின்றி காணப்பட்டது. மேலும், மழை காலத்தில் தண்ணீர் சீராக செல்ல முடியாமல் அருகில் உள்ள குடியிருப்புகளில் மழைவெள்ளம் புகுந்து வந்தது. எனவே ஓடையை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்பதே ஈரோடு மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

எதிர்பார்ப்பு

இந்தநிலையில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரும்பள்ளம் ஓடையை தூர்வாரி, கான்கிரீட் தளம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்த பணிகள் நடக்கிறது. திண்டல், செங்கோடம்பள்ளம் உள்ளிட்ட இடங்களில் பணிகள் முடிவடைந்து நல்லியம்பாளையம் பகுதியில் பணி தொடர்ந்து நடக்கிறது.

பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற உள்ளதால், பெரும்பள்ளம் ஓடையை முழுமையாக மீட்டெடுத்து மீண்டும் புதர்கள் ஆக்கிரமிக்காமல் இருக்கும் வகையில் முறையாக பராமரிக்க வேண்டும் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

ரூ.200 கோடி

பெரும்பள்ளம் ஓடையில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பெரும்பள்ளம் ஓடையை தூர்வாரி அழகுபடுத்துவதற்காக மொத்தம் ரூ.200 கோடியே 71 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 12 கிலோ மீட்டர் நீளமுள்ள பெரும்பள்ளம் ஓடையில் 327 இடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. 8 கிலோ மீட்டர் நீளத்துக்கு கம்பி வலை தடுப்புகளும், 25 இடங்களில் நீர்சரிவு அமைப்புகளும் ஏற்படுத்தப்படும்.

ஓடையின் பக்கவாட்டில் 4 பூங்காக்கள் புதிதாக ஏற்படுத்தப்படும். மேலும், 2.4 கிலோ மீட்டர் நீளத்தில் இணைப்பு சாலைகளும், ஓடையின் இருபுறங்களையும் இணைக்கும் வகையில் 4 இடங்களில் பாலங்களும் அமைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

சாக்கடை கழிவுநீர்

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஜெ.ஜெ.பாரதி கூறியதாவது:-

ஈரோடை அமைப்பு சார்பில் பெரும்பள்ளம் ஓடை கடந்த 2 முறை முழுமையாக தூர்வாரப்பட்டது. இதில் 30 மீட்டர் அகலத்துக்கு தூர்வாரப்பட்ட சில நாட்களில் மழை பெய்தது. இருந்தாலும் அருகில் உள்ள வீடுகளில் 2 அடிக்கு மழைநீர் புகுந்தது. தூர்வாரப்படாமல் இருந்திருந்தால் பெரும் அசம்பாவித சம்பவம் ஏற்பட்டிருக்கக்கூடும்.

ஓடையை தூர்வாரி கான்கிரீட் அமைக்கும் திட்டம் வரவேற்கத்தக்கது. இந்த திட்டத்தின்படி பெரும்பள்ளம் ஓடையில் சாக்கடை கழிவுநீர் கலக்காமல்,

தனியாக குழாய் மூலமாக கொண்டு செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. எந்தவொரு நிலையிலும் ஓடையில் கழிவுநீர் கலக்காத வகையில் நடவடிக்கை வேண்டும்.

கண்காணிப்பு கேமரா

முக்கியமாக குப்பைகளை கொட்ட அனுமதிக்கக்கூடாது. இதுதொடர்பாக வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். பொதுமக்களுக்கு குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்த வீடுகள் தோறும் பிளாஸ்டிக் டப்பாவும் கொடுத்தோம். ஆனால் பொதுமக்கள் முறையாக கடைபிடிக்காமல் குப்பைகளை நேரடியாக ஓடையில் கொட்டுகிறார்கள்.

இதனால் தண்ணீர் சீராக செல்லாமல் அடைப்பு ஏற்பட்டு, மீண்டும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடும் என்ற அபாயத்தை பொதுமக்கள் உணராமல் உள்ளனர். ஓடையில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டாமல் தடுக்க கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிக்க வேண்டும். பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தூர்வாரப்பட்டு சுத்தம் செய்தாலும், மீண்டும் பழைய நிலை ஏற்படாமல் இருக்க பராமரிப்பு பணிகள் மிகவும் அவசியம். பெரும்பள்ளம் ஓடையில் கான்கரீட் தளம் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்தாலும், 3 மாதங்களுக்கு ஒரு முறை அவசியம் பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நோக்கம்

ஈரோடு மாநகராட்சி மரப்பாலம் கச்சேரி வீதியை சேர்ந்த பூவிழி விஜயகண்ணா கூறியதாவது:-

பெரும்பள்ளம் ஓடைக்கு மழைநீர் மட்டுமின்றி கீழ்பவானி வாய்க்காலின் கசிவுநீரும் வருகிறது. இதில் சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலமாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. எனவே பெரும்பள்ளம் ஓடையில் சாக்கடை கழிவுநீர் கலப்பது முழுமையாக நிறுத்தப்பட வேண்டும். அதுமட்டுமின்றி துணை ஓடைகளையும் தூர்வார வேண்டும். அப்போதுதான் தூர்வாரும் பணியின் நோக்கம் முழுமை அடையும்.

வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால், ஈரோட்டிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஸ்டோனி பாலம், மரப்பாலம் உள்ளிட்ட இடங்களில் செல்லும் ஓடைக்கு அருகில் பல்வேறு குடியிருப்புகள் உள்ளன. அங்கு பெரும்பள்ளம் ஓடையை உடனடியாக தூர்வார வேண்டும். அப்போதுதான் கனமழை பெய்தாலும் வீடுகளுக்குள் மழைநீர் புகுவது தடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story