வீடுகளுக்கான குழாய்களில் குடிநீருடன் சாக்கடை கலப்பு


வீடுகளுக்கான குழாய்களில் குடிநீருடன் சாக்கடை கலப்பு
x

திருநகரில் வீடுகளுக்கான குழாய்களில் சாக்கடை கலந்து குடிநீர் வருவதாகவும் அதை குடித்த குழந்தைகள் வாந்தி எடுத்ததாக புகார் எழுந்தது.

மதுரை

திருப்பரங்குன்றம்,

திருநகரில் வீடுகளுக்கான குழாய்களில் சாக்கடை கலந்து குடிநீர் வருவதாகவும் அதை குடித்த குழந்தைகள் வாந்தி எடுத்ததாக புகார் எழுந்தது.

குழாய்கள் உடைப்பு

மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 94-வது வார்டான திருநகரில் பொதுமக்களுக்கு வைகை மற்றும் காவிரி கூட்டுக்குடிநீர் ஒருநாள் விட்டு ஒருநாள் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முல்லைபெரியாறு குடிநீருக்காக தெருக்களில் குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. புதியகுழாய்கள் பதிப்பதற்காக பொக்லைன் மூலம் பள்ளங்கள் தோண்டும் போது காவிரி குடிநீர் குழாய்கள் உடைந்து சேதமாகி தண்ணீர் வீணாகி வந்தது. அதனால் பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இதனையடுத்து 94-வது வார்டு மாநகராட்சி குடிநீர் பிரிவு ஊழியர்கள் தங்களுக்கான பணியை தவிர்த்து தெருக்களில் உடைந்த காவிரி குடிநீர் குழாயை சரிசெய்து பொதுமக்களுக்கு தண்ணீர் சீராக சப்ளை செய்து வந்தனர்

சோப்பு நுரையாக குடிநீர்

இந்த நிலையில் வழக்கம் போல ஒருநாள் விட்டு ஒருநாள் என்ற அடிப்படையில் நேற்று ஓனாக்கல் முதல் தெருவில் வீடுகளுக்கு குழாயில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. அதில் குழாயை திருகியதும் செம்மண் நிறத்தில் மங்கலாக தண்ணீர் வந்தது. பிறகு சிறிது நேரத்தில் சோப்புமுறை போல நுரையாக தண்ணீர் வந்தது. அதில் சாக்கடை துர்நாற்றம் வீசியது.

இதனால் அப்பகுதி மக்கள் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்களில் ஒருசிலர் நுரையாக வந்த தண்ணீரை புகைப்படம் எடுத்து 94-வது வார்டு மாமன்ற உறுப்பினர் என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தகவல் திருநகர் பகுதி முழுவதுமாக பரவியது. அதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

குழந்தைக்கு வாந்தி வந்தது

இது தொடர்பாக ஓனாக்கல் முதல் தெருவை சேர்ந்த உமையாள் பார்வதி கூறியதாவது:-

கடந்த 10 நாட்களாகவே ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் மங்கலாகவே வந்தது. மழை பெய்வதால் தண்ணீர் மங்கலாக வரலாம் என்று கருதி தண்ணீரை குடித்தோம்.

அதில் குழந்தைகளுக்கு வாந்தி வந்தது. ஆஸ்பத்திரிக்கு சென்று மாத்திரை வாங்கி கொடுத்தோம். அந்த தண்ணீரை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் அரிப்பு ஏற்படுகிறது என்றார்.

குடிநீருடன் சாக்கடை கலப்பு

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சிவகுருநாதன் கூறும்போது:-

கடந்த சில நாட்களுக்காகவே புதியதாக குழாய் பதிப்பதாக கூறி பூமிக்கடியில் பள்ளங்கள் தோண்டி வருகிறார்கள். அதில் உடைந்து செம்மண் நிறத்தில் தண்ணீர் வருகிறது. மேலும் தண்ணீர் சாக்கடை நாற்றம் வீசுகிறது. இதுதொடர்பாக அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளோம் என்றார்.

இந்த நிலையில் மாநகராட்சி கவுன்சிலர் ஸ்வேதாஜெரார்டு பொதுமக்களிடம் உரியதண்ணீரை பயன்படுத்த வேண்டாம் என்று கூறினார்.மேலும் அவர் மாநகராட்சி அதிகாரியிடம் பேசி உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.இந்த நிலையில் மதுரை மாநகராட்சி லாரி மூலம் ஓனாக்கல் முதல் தெரு மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.


Next Story