அரசு பள்ளி குடிநீர் தொட்டிகளில் சோப்பு ஆயில் கலப்பு
கரூர் அருகே அரசு பள்ளி குடிநீர் தொட்டிகளில் சோப்பு ஆயிலை கலந்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தண்ணீரில் துர்நாற்றம்
கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் தரகம்பட்டி அருகே மேலப்பகுதி ஊராட்சி வீரணம்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வீரணப்பட்டி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 159 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டனா். பின்னர் நேற்று காலை சுமார் 8.30 மணிக்கு வழக்கம்போல் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்தனர்.
அப்போது, மாணவர்கள் சிலர் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீரை எடுத்து குடித்தனர். அப்போது அந்த தண்ணீர் துர்நாற்றம் வீசியது. பின்னர் அதே வளாகத்தில் உள்ள மற்ற 2 குடிநீர் தொட்டிகளிலும் தண்ணீர் குடிப்பதற்காக குழாயை திறந்து உள்ளனர். அப்போது அந்த தண்ணீரும் துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் ஆசிரியர்களிடம் கூறி உள்ளனர்.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ஜேசுராஜ் சிந்தாமணிபட்டி ேபாலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
சோப்பு ஆயில் கலப்பு
அதன்பேரில், கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர், கடவூர் தாசில்தார் முனிராஜ், மேலப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.
இதில் பள்ளியின் சுற்றுசுவர், முகப்பு வாயில் பகுதியில் உள்ள 3 குடிநீர் தொட்டிகளையும் பார்த்தனர். அப்போது அந்த தொட்டிகளில் துணிகளை துவைக்க பயன்படுத்த கூடிய சோப்பு ஆயில் தண்ணீருடன் கலந்து இருப்பது தெரியவந்து உள்ளது. மேலும் குடிநீர் தொட்டி அருகே கிடந்த ஒரு காலி பாட்டிலையும் போலீசார் கைப்பற்றினர்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்து தகவல் அறிந்த தடயவியல் நிபுணர்கள் சரண்யா, பவதாரணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து 3 தொட்டிகளிலும் உள்ள தண்ணீரை பரிசோதனைக்காக எடுத்து சென்றனர்.
இந்தசம்பவம் குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜேசுராஜ் சிந்தாமணிப்பட்டி போலீஸ் நிலையில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, குடிநீர் தொட்டிகளில் சோப்பு ஆயிலை கலந்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.