மு.க.அழகிரி மதுரை கோர்ட்டில் ஆஜர்


மு.க.அழகிரி மதுரை கோர்ட்டில் ஆஜர்
x

போலீசார், மு.க.அழகிரி, மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் மன்னன் மற்றும் தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் உள்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதே போல நில அபகரிப்பு வழக்கும் பதிவாகி இருந்தது. இந்த 2 வழக்குகளும் மதுரை மாவட்ட முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் நேற்று நீதிபதி டீலாபானு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி, முன்னாள் துணை மேயர் மன்னன் உள்ளிட்டோர் ஆஜரானார்கள்.

மதுரை


கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள அம்பலகாரன்பட்டி வல்லடிகாரர் கோவிலுக்குள், கிராம தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் மு.க. அழகிரி ஆலோசனை நடத்தினார். அப்போது கோவில் கதவுகள் அடைக்கப்பட்டு இருந்தன. அங்கு இருந்தவர்களிடம் மு.க.அழகிரி ஓட்டுக்காக பணம் பட்டுவாடா செய்வதாக அ.தி.மு.க.வினர் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து அப்போதைய மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர்.

இதற்கு மு.க.அழகிரி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தன்னை தாக்கியதாக தாசில்தார் காளிமுத்து கீழவளவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், மு.க.அழகிரி, மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் மன்னன் மற்றும் தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் உள்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதே போல நில அபகரிப்பு வழக்கும் பதிவாகி இருந்தது. இந்த 2 வழக்குகளும் மதுரை மாவட்ட முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகள் நேற்று நீதிபதி டீலாபானு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி, முன்னாள் துணை மேயர் மன்னன் உள்ளிட்டோர் ஆஜரானார்கள். மு.க.அழகிரி தரப்பில் மூத்த வக்கீல் மோகன்குமார் ஆஜரானார். அப்போது இந்த வழக்கு தொடர்பாக 3 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற 6-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

பின்னர் அவர்கள் கோர்ட்டு வளாகத்தில் இருந்து வெளியே வந்த போது மு.க.அழகிரியின் ஆதரவாளர் உதயகுமார் திடீரென கீழே விழுந்ததால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அழகிரியிடம், மதுரை வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களை சந்திப்பாரா? என்பது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அதுபற்றி எனக்கு தெரியாது" என்றார்.


Next Story