மக்களின் முதல்-அமைச்சர் என்பதை மு.க.ஸ்டாலின் நிரூபித்துள்ளார்
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்து, மக்களின் முதல்-அமைச்சர் என்பதை மு.க.ஸ்டாலின் நிரூபித்துள்ளார் என்று அமைச்சர் இ.பெரியசாமி கூறினார்.
மகளிர் உரிமைத்தொகை
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்தில் மகளிருக்கு ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் பணியின் தொடக்க விழா, தேனி அருகே வீரபாண்டியில் உள்ள வீட்டுவசதி வாரிய சமுதாய கூடத்தில் நடந்தது.
விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். இதில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி கலந்துகொண்டு மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். விழாவில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 2 ஆயிரம் மகளிருக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஏ.டி.எம். கார்டுகளை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கி பேசினார்.
அப்போது அமைச்சர் இ.பெரியசாமி பேசியதாவது:-
மக்களின் முதல்-அமைச்சர்
பெண்களின் வளர்ச்சி, முன்னேற்றம், பாதுகாப்பு ஆகியவற்றினை உறுதி செய்யும் வகையில் இலவச பஸ் பயண திட்டம், பெண்களின் உயர்கல்வியை ஊக்கப்படுத்தும் புதுமை பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் மாணவ, மாணவிகளின் நலன் கருதி பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், குடும்பத்துக்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்திற்காக ரூ.1 கோடியே 6 லட்சம் மகளிர்களுக்கு மாதம் ரூ.1,000- வழங்கும் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்து, மக்களின் முதல்-அமைச்சர் என்பதை மு.க.ஸ்டாலின் நிரூபித்து காட்டியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார், தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.