எம்.எல்.ஏ. காரை சிறைபிடித்த பொதுமக்கள்


எம்.எல்.ஏ. காரை சிறைபிடித்த பொதுமக்கள்
x

நாட்டறம்பள்ளி அருகே சுடுகாட்டு பாதையை அகலப்படுத்தக்கோரி பொதுமக்கள் எம்.எல்.ஏ. காரை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி அருகே சுடுகாட்டு பாதையை அகலப்படுத்தக்கோரி பொதுமக்கள் எம்.எல்.ஏ. காரை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குறுகலான பாதை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே ஆத்துக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பன்னாடகுப்பம் பகுதியில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இறந்தவர்கள் உடல்கள் சுடுகாட்டிற்கு எடுத்துச்செல்லும் பாதை மிகவும் குறுகலாக இருந்து வந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் இறந்தவர்கள் உடல்களை சுடுகாட்டிற்கு எடுத்துச்செல்ல மிகவும் சிரமப்பட்டனர்.

இதனால் சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை அகலப்படுத்தக்கோரி தாசில்தார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவரிடம் பல முறை புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எம்.எல்.ஏ. கார் சிறைபிடிப்பு

இந்தநிலையில் நேற்று அப்பகுதியில் பெண் ஒருவர் இறந்துவிட்டார். அப்போது அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவ்வழியாக ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. க.தேவராஜி மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார் ஆகியோர் வந்தனர். அவர்கள் வந்த காரை அப்பகுதி பொதுமக்கள் சிறை பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அவர்கள் சுடுகாட்டுக்கு அகலப்படுத்தி தரக்கோரி பலமுறை நாட்டறம்பள்ளி தாசில்தார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் எங்களுக்கு உடனடியாக அகலப்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதற்கு நாட்டறம்பள்ளி தாசில்தாரிடம் பேசி விரைவில் சுடுகாட்டிற்கு பாதை அமைத்துத் தர நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ. கூறினார். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story