கும்பகோணம்-தஞ்சை நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை- ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.
கும்பகோணம்-தஞ்சை நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டரிடம் வலியுறுத்தி உள்ளார்.
கும்பகோணம்-தஞ்சை நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டரிடம் வலியுறுத்தி உள்ளார்.
கலெக்டரிடம் கோரிக்கை
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை, ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கும்பகோணம்- தஞ்சை தேசிய நெடுஞ்சாலை சிதிலமடைந்து பொது போக்குவரத்து என்பது பெரும் சவாலாக இருந்து வந்தது. இந்த சாலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சீரமைப்பு பணிகள் தொடங்கி உள்ளன. தஞ்சையில் தொடங்கப்பட்டுள்ள இந்த பணியானது ஒரே ஒரு கட்டுமான குழுவை கொண்டு கும்பகோணம் நோக்கி மிகவும் மெதுவாக நடைபெற்று வருகிறது.
கடந்த சில வாரங்களாக பெய்துள்ள தொடர்மழை காரணமாக இந்த சாலை உருக்குலைந்த நிலையில் காணப்படுவதால், நடந்து வரும் சாலை சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
வேகமாக...
தஞ்சை பள்ளியக்ரஹாரம் ரவுண்டானாவில் இருந்து அய்யம்பேட்டை வரை ஒரு பகுதியாகவும். அய்யம்பேட்டை தொடங்கி பாபநாசம் உத்தாணி வரை ஒரு பகுதியாகவும், உத்தாணி முதல் தாராசுரம் புறவழிச்சாலை வரை ஒரு பகுதியாகவும் என 3 பகுதியாக இந்த சீரமைப்பு பணிகளை, 3 கட்டுமான குழுக்களை கொண்டு ஒரே நேரத்தில் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் வேகமாக இந்த பணிகளை நிறைவு செய்ய முடியும்.
இந்த நெடுஞ்சாலையில் வடிகால் மற்றும் சிறு பாலங்கள் கட்டுமானத்தின் போது, அய்யம்பேட்டை, பாபநாசம் பேரூராட்சி பகுதிகளில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் பேரூராட்சி பொறியாளர்கள், பேரூராட்சி மன்ற தலைவர்களின் ஆலோசனைகளின் அடிப்படையிலும், பேரூராட்சி அல்லாத கிராம பகுதிகளில் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களின் பொறியாளர்கள், ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஒன்றியக் குழு மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆகியோரின் ஆலோசனைகளின் அடிப்படையிலும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.