நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை தொடங்க வேண்டும்


நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை தொடங்க வேண்டும்
x
தினத்தந்தி 24 Jun 2023 12:15 AM IST (Updated: 24 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

இடும்பாவனம் ஊராட்சியில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை தொடங்க வேண்டும் என முத்துப்பேட்டை ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருவாரூர்

முத்துப்பேட்டை:

இடும்பாவனம் ஊராட்சியில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை தொடங்க வேண்டும் என முத்துப்பேட்டை ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஒன்றியக்குழு கூட்டம்

முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் கனியமுதா ரவி தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், துணைத்தலைவர் கஸ்தூரி செந்தில், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தமயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் லெனின் வரவேற்றார்.கூட்டத்தில் உறுப்பினர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-

பழனிவேலு (தி.மு.க.):- கற்பகநாதர்குளம்-வாடியக்காடு இணைப்பு சாலை சேதம் அடைந்துள்ளது. அதை சீரமைக்க வேண்டும். இடும்பாவனம் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும். இடும்பாவனம் ஊராட்சியில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவை தொடங்க வேண்டும். காடுவெட்டி நடுச்சாலை, மயானத்துக்கு செல்லும் சாலையை சிமெண்டு சாலையாக மாற்றி தர வேண்டும்.

குடிநீர் தட்டுப்பாடு

தேவகி (தி.மு.க.):- சட்டமன்ற தொகுதி மேம்பாடு நிதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும்பணி தொடங்கப்படாமல் உள்ளது. உடனே அதை தொடங்க வேண்டும். அம்மலூர் எருக்கன் குளத்தில் தடுப்புச்சுவர் மற்றும் பழுதடைந்த மதகு ஆகியவற்றை சரி செய்ய வேண்டும்.

ரோஜாபானு (சுயேச்சை):- குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 3 இடங்களில் குடிநீர் தொட்டி கட்டித்தர வேண்டும். எனது வார்டில் அனைத்து சாலைகளையும் சீரமைத்து தர வேண்டும்.

மோகன் (தி.மு.க.):- வல்லம்பகாடு சாலையை சீரமைத்து தர வேண்டும். எனது வார்டு பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனை உடனே சரி செய்து தர வேண்டும்.

சுற்றுச்சுவர்

கல்யாணம் (தி.மு.க.):- ஜாம்புவானோடை வடக்காடு சாலை, பசுமை நகர் சாலை சேதம் அடைந்துள்ளன. அதனை சீரமைத்து தர வேண்டும். தெற்குகாடு தர்மகோவில்தெரு சாலை சரி செய்து தர வேண்டும்.

யசோதா (தி.மு.க.):- மாங்குடி ஆற்றங்கரையில் மயான கொட்டகை அமைத்து தர வேண்டும். மாங்குடி அரசு பள்ளி தெரு சாலை மோசமான நிலையில் உள்ளது. உடனே சரி செய்து தர வேண்டும். ஒதியத்தூர் உயர்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்

அன்பழகன் (பா.ஜ.க.):- தில்லைவிளாகம் கீழக்கரை மற்றும் மேலக்கரை நமசிக்காடு சாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இவற்றை சீமைத்து தர வேண்டும். சீரமைக்காவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவேன்.

கனியமுதா ரவி (ஒன்றியக்குழு தலைவர்):- உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

இதில் உறுப்பினர்கள் ராதா, அனிதா, பாக்கியம், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story