தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தோல் நோய்களுக்கான நவீன சிகிச்சை பிரிவு
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் தோல் நோய்களுக்கான நவீன சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் தோல் நோய்களுக்கான நவீன சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
நவீன சிகிச்சை பிரிவு
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாளுக்குநாள் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக தோல் நோய் சிகிச்சை பிரிவில் தனியார் மருத்துவமனைக்கு இணையாக நவீன வசதிகளுடன் அழகியல் லேசர் சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இங்கு உடலில் தேவையில்லாத மச்சங்கள், உடலில் குத்தப்பட்ட டாட்டூகளை அகற்றுவதற்காக யாக் லேசர் கருவி வாங்கப்பட்டுள்ளது.
இதேபோல உடலில் தோன்றும் பருக்களை அகற்றுவதற்காக கார்பன்-டை-ஆக்சைடு லேசர் கருவியும், பருக்களால் ஏற்படும் தழும்புகளை அடியோடு அகற்றுவதற்காக ரேடியோ பிரிகொயன்சி கருவியும், சோரியாசிஸ் மற்றும் வெண்மை தழும்புகளை நீக்குவதற்கான ரேடியோ தெரபி கருவியும் மக்கள் பயன்பாட்டிற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பெண்களின் முக்கிய பிரச்சினையான முகத்தில் தேவையின்றி வளரும் ரோமங்களை முற்றிலுமாக வலியின்றி அகற்றுவதற்காக டையோடு லேசர் கருவியும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்துள்ளது.
மருத்துவ கண்காட்சி
இந்த அழகியல் லேசர் பிரிவை மருத்துவக்கல்வி இயக்குனர் மீனாட்சிசுந்தரம் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அடுத்தபடியாக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள தோல் நோய் துறை, நவீனப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் தற்போது அழகியல் லேசர் கருவிகள் மக்கள் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டுள்ளது. இந்த கருவிகள் மூலம் சிகிச்சை பெற தனியார் மருத்துவமனைகளில் ரூ.20 ஆயிரத்திற்கு அதிகமாக செலவு ஏற்படும். ஆனால் இந்த சிகிச்சைகள் அனைத்தும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. இது தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும். தேனி அரசு மருத்துவமனையின் சிறப்புகள் குறித்து பொதுமக்களுக்கான மருத்துவ கண்காட்சி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 8-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் தோல்நோய் சிகிச்சை பிரிவு டாக்டர்கள் உமா, சுதா, அமுதா, பாலசவுந்தர், மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் கண்ணன் போஜராஜ் மற்றும் டாக்டர்கள் உடனிருந்தனர்.