"தேசியக்கொடியின் மாண்பை உலகம் அறிய செய்துவிட்டார் மோடி" மத்திய மந்திரி எல்.முருகன் புகழாரம்


தேசியக்கொடியின் மாண்பை உலகம் அறிய செய்துவிட்டார் மோடி மத்திய மந்திரி எல்.முருகன் புகழாரம்
x

“தேசியக்கொடியின் மாண்பை உலகம் அறிய செய்துவிட்டார் மோடி” என மத்திய மந்திரி எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை,

75-வது சுதந்திர தின பெருவிழாவையொட்டி, 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை இல்லங்களில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடும்படி பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். அதன்படி இல்லங்கள், கடைகள்தோறும் மக்கள் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறார்கள்.

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இல்லங்களில் மட்டுமல்லாமல் தமிழகம்-புதுச்சேரி தழுவிய 5,800 பெட்ரோல் நிலையங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்படும் என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்தது. இதன் ஒரு கட்டமாக சென்னை தாசபிரகாஷ் அருகே உள்ள பெட்ரோல் 'பங்க்'கில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி தலைமை தாங்கினார். இதில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்துகொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்தார். பின்னர் 'பூஸ்டர்' டோஸ் தடுப்பூசி போடும் முகாமையும் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து சுதந்திர போராட்டம் தொடர்பான புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்ததுடன், பெட்ரோல் பங்க்குக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தேசியக்கொடியையும் அவர் வழங்கினார்.

தேசியக்கொடியின் மாண்பை...

இந்த விழாவில் எல்.முருகன் பேசியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இல்லங்கள்தோறும் மக்கள் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின அமுத பெருவிழாவை கொண்டாடி வருகிறார்கள். அந்தவகையில் தேசியக்கொடியின் மாண்பை உலகம் அறிய செய்துவிட்டார், பிரதமர் மோடி. தேசியக்கொடிக்கு தனி பெருமை உண்டு. அந்த பெருமையை இன்றைய தினம் மக்கள் வீடுதோறும் அனுபவித்து வருகிறார்கள். கட்டபொம்மன், பூலித்தேவன், வ.உ.சி., திருப்பூர் குமரன் என சுதந்திர போராட்டத்தில் அங்கம் வகித்த தமிழர்கள் ஏராளம். இந்த தியாகிகளின் தியாகத்தை, வீரத்தை எதிர்கால தலைமுறையினர் அறியவே பிரதமர் இந்த மாபெரும் அழைப்பை விடுத்தார். இதனை சாத்தியமாக்கி தந்த மக்களுக்கு நன்றி.

'அரியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளப்படுத்தி கவுரவிக்கும் செயல்பாடுகளில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு தினமான வருகிற 20-ந் தேதி பாளையங்கோட்டையில் அவரது நினைவு தபால்தலை வெளியிடப்பட உள்ளது'.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பா.ஜ.க. தமிழக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேசிய செயற்குழு உறுப்பினர் சுரேஷ் கர்ணா, மாவட்ட தலைவர் தனசேகரன், பொதுச்செயலாளர் லதா உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகளும் பங்கேற்றனர்.


Next Story