தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.8.59 லட்சம் அபேஸ்
அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஓசூர் தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.8.59 லட்சம் அபேஸ் செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஓசூர் தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.8.59 லட்சம் அபேஸ் செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனியார் நிறுவன அதிகாரி
ஓசூர் அம்மன் நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 26). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் இருசக்கர வாகன நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதிக சம்பளத்தில் வேலைக்காக இணையதளத்தில் பதிவு செய்திருந்தார். கடந்த 7.6.2022 அன்று சிவக்குமாரை ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டார்.
அதில் பேசிய நபர் தனது பெயர் சர்மா என்றும், உங்களுக்கு பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில ஏஜென்சி மேலாளர் பதவி உள்ளது. நீங்கள் எதிர்பார்ப்பதை போல அதிக சம்பளம் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் சிவக்குமாரிடம் பேசிய அந்த நபர், பதிவு கட்டணம், பயிற்சி கட்டணம், நடைமுறை செலவுகளுக்காக பணம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.
ரூ.8.59 லட்சம் அபேஸ்
இதை நம்பி சிவக்குமார் ரூ.8 லட்சத்து 59 ஆயிரத்து 439-ஐ அந்த நபர் கூறிய கணக்குகளில் செலுத்தினார். தனக்கு வேலை தொடர்பாக எந்த தகவலும் வராததால் சந்தேகம் அடைந்த சிவக்குமார் அந்த நபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிவக்குமார் தான் ஏமாற்றப்பட்டது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.