புதுமை பெண் திட்டத்தின் கீழ் 2,401 கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை- ஆணைகளை கலெக்டர் வழங்கினார்
புதுமை பெண் திட்டத்தின் கீழ் 2,401 கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.
பர்கூர்:
புதுமை பெண்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமை பெண் திட்டத்தை நேற்று சென்னையில் நடந்த விழாவில் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் புதுமை பெண் திட்டத்தின் கீழ் 43 கல்லூரிகளில் படிக்கும் 2,401 மாணவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பர்கூர் மதியழகன், தளி ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி பேசியதாவது:-
விருப்பமான பணி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 43 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் படித்து வரும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த 2,401 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மாதாந்திர உதவித்தொகை மாணவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
எனவே, மாணவிகள் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகையை பெற்று தங்களது மேல்படிப்பை முடித்து, விருப்பமான பணியில் சேர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் சதீஸ்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, முன்னாள் எம்.எல்.ஏ. செங்குட்டுவன், முன்னோடி வங்கி மேலாளர் மகேந்திரன், பேரூராட்சி தலைவர்கள் சந்தோஷ்குமார், தம்பிதுரை, தாசில்தார்கள் பன்னீர்செல்வி, ஜெய்சங்கர், தெய்வநாயகி, சக்திவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, வெங்கட்ட ராமகணேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் வங்கியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில், பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி துணை முதல்வர் நபிஷாபேகம் நன்றிகூறினார்.