பணவீக்கம் 5.8 சதவீதமாக குறைந்தது அத்தியாவசிய பொருட்கள் விலை குறையுமா?-பொருளாதார ஆலோசகர், வியாபாரிகள் கருத்து
பணவீக்கம் என்பது நாட்டில் உணவு பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலையைப் பொறுத்து, நுகர்வோர் குறியீட்டு எண் அடிப்படையில் மாதந்தோறும் கணக்கிடப்படுகிறது.
பண வீக்கம் குறைந்துள்ளதா? அதிகரித்துள்ளதா? என்பதை கடந்த மாதங்களுடன் ஒப்பிட்டு மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை ஒவ்வொரு மாதமும் அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த நவம்பர் மாதத்திற்கான, மொத்த விலைக்கான பணவீக்க நிலை குறித்து மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றிற்கான மொத்த விலை பணவீக்கம் கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 5.85 சதவீதமாக சரிந்துள்ளது. அதேப்போன்று, சில்லரை பணவீக்கம் கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு 5.88 சதவீதமாக குறைந்துள்ளது' என்று தெரிவிக்கப்பட்டது.
இதனைச் சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் 2022-23-ம் நிதி ஆண்டுக்கான துணை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் 'பணவீக்கம் மேலும் குறையும்' என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார்.
அப்போது அவர் பேசுகையில், 'சில்லரை பணவீக்கம் கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இதனை மேலும் குறைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். அத்தியாவசிய பொருட்கள் விலை நிலவரத்தை மத்திய அரசு தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது. குறைந்த அளவு பணவீக்கத்துடன் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக திகழ்கிறது. எனவே பொருளாதார தேக்கநிலை பற்றி அச்சம் தேவையில்லை' என்று கூறி இருந்தார்.
பணவீக்கம் குறைந்து வருவதாக சொல்லப்படுவதால், அது அத்தியாவசிய பொருட்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறதா? என்பது பற்றி பல்வேறு தரப்பினரின் பார்வை வருமாறு:-
பொருளாதார ஆலோசகர்
பொருளாதார ஆலோசகர் வ.நாகப்பன்:-
இந்தியாவில் பணவீக்கம் தொடர்ந்து இருந்து வருகிறது. இனியும் தொடர்ந்து இருக்கத்தான் போகிறது. பண வீக்கம் 4 முதல் 6 சதவீதம் அளவுக்குள் இருக்கும். சில நேரங்களில் இந்த அளவைத் தாண்டி இருக்கிறது. 1992-1994-ம் ஆண்டுகளின் போது பண வீக்கம் அதிகபட்சமாக 17 சதவீதம் அளவில் கூட இருந்துள்ளது.
பணவீக்கம் குறைந்தால் விலைவாசி குறைந்து விடும் என்று கருதக்கூடாது. பணவீக்கம் குறைந்தாலும் விலையேற்றம் இருக்கவே செய்யும். அதனை கட்டுப்படுத்த முடியாது. ஆனால் விலையேற்றத்தின் வேகத்தை கட்டுப்படுத்தும். உதாரணமாக ஒரு பொருள் 6 சதவீதம் உயர்வதற்கு பதிலாக 4 சதவீதம் அளவுக்கு உயர்வு இருக்கும்.
அதாவது கடந்த ஆண்டு ரூ.100-க்கு வாங்கிய ஒரு பொருள் இந்த ஆண்டு ரூ.108-க்கு விற்பனையாகி அடுத்த ஆண்டு ரூ.112 ஆக விலை அதிகரிப்பது போன்றது ஆகும்.
வாங்கும் சக்தி குறைந்துள்ளது
தர்மபுரி நகர வர்த்தகர் சங்க பொருளாளர் ஜி.பாலன்:-
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு பழங்கள் விலை சற்று குறைந்துள்ளது. அதே நேரத்தில் பெரும்பாலான மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலைவாசி உயர்வை ஒப்பிடும்போது ஏழை, எளிய மக்களின் வருவாய் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கவில்லை. இதனால் பொருட்களை வாங்கும் திறன் குறைந்து விட்டது. மக்களிடம் பணப்புழக்கமும் குறைந்து இருக்கிறது. இதனால் பெரும்பாலானவர்கள் வாங்கும் பொருட்களின் அளவை கணிசமாக குறைத்து வருகிறார்கள். இது பொருட்களின் இயல்பான விற்பனையை பாதிக்கிறது.
புதிய உச்சம்
தர்மபுரி அனைத்து வணிகர் சங்க செயல் தலைவர் கே.வி.எஸ்.ராஜா:-
சரக்கு வாகனங்களின் உதிரிப்பாகங்கள் விலையேற்றம், உச்சம் தொட்ட பெட்ரோல்-டீசல், சுங்க கட்டணம் உயர்வு போன்ற காரணங்களால் அத்தியாவசிய பொருட்கள் விலை தொடர்ந்து ஏறுமுகத்தை நோக்கியே செல்கிறது. குறிப்பாக இருசக்கர வாகனங்கள் விலை கடந்த 2 ஆண்டுகளை ஒப்பிடும்போது இப்போது கணிசமாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு பொருளின் விலையும் புதிய உச்சம் தொட்டு வருகிறது.ஆனால் பண வீக்கம் குறைந்தால் அத்தியாவசிய பொருட்கள் விலை குறையும் என்று கூறப்படுகிறது. ஆனால் பண வீக்கம் குறைந்தாலும் அதற்கேற்ப விலைவாசி குறையவில்லை.
குறைந்ததாக தெரியவில்லை
பாலக்கோட்டை சேர்ந்த இல்லத்தரசி விஜயா:-
தற்போது பணவீக்கம் குறைந்து வருவதாகவும் அதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள், ஆடைகள் விலை குறைந்து இருப்பதாகவும் கூறுகிறார்கள். ஆனால் நடைமுறையில் பொருட்களின் விலை குறைந்ததாக தெரியவில்லை. ஏற்கனவே வாங்கிய விலையைவிட அனைத்து பொருள்களும் கூடுதல் விலையில் தான் இருக்கிறது.
பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்ததால் சரக்கு வாகனங்களின் வாடகை உயர்ந்துவிடுகிறது. அதேப்போன்று மளிகை, காய்கறிகள் விலை உயர்ந்தால் ஓட்டல்களில் உணவு வகைகள் விலை ஏறுகிறது. ஆனால் இவற்றின் விலை குறைந்தால் அவற்றை பயன்படுத்தி தயாரிக்கும் பொருட்களின் விலை கடைகளில் குறைவதில்லை. விலைவாசி உயர்வு பொருட்களை வாங்கும் ஏழை, எளிய மக்களையே அதிக அளவில் பாதிக்கிறது.
ஏழைகளின் வருமானம் உயரவில்லை
பேளாரஅள்ளியை சேர்ந்த விவசாயி சங்கர்:-
தேவை மற்றும் வரத்து அடிப்படையில் காய்கறிகள் விலை அவ்வப்போது வீழ்ச்சி அடைகிறது. இதனால் அவற்றை உற்பத்தி செய்யும் விவசாயிகள் போதிய விலை கிடைக்காமல் அவ்வப்போது பாதிக்கப்படுகிறார்கள். உளுந்து, டீ தூள், நெய், சோப்பு மற்றும் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் மளிகை பொருட்கள் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டுதான் உள்ளது. இப்போது பண வீக்கம் குறைந்துள்ளது என்று கூறப்பட்டாலும், அத்தியாவசிய பொருட்கள் விலை குறையவில்லை. அதே நேரத்தில் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஏழைகளின் வருமானம் உயரவில்லை. விலைவாசி உயர்வு ஏழை எளிய மக்களை எப்போதும் தொடர்ந்து பாதித்து கொண்டே உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பண வீக்கம் குறைவது ஒருபுறம் இருந்தாலும் பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் போன்ற மிகவும் அத்தியாவசிய பொருட்கள் விலை இனி உயராமல் கட்டுக்குள் வைத்துக்கொண்டாலே போதும் என்பது பொதுமக்களின் பொதுவான கோரிக்கையாக உள்ளது.
'பணவீக்கம்' வார்த்தையை எளிமைப்படுத்தியவர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்
தமிழில் சில வார்த்தைகள் அலங்காரத்துடன் இருக்கும். இந்த வார்த்தைகளின் அர்த்தம் படித்தவர்கள் மனதில் சட்டென்று பதிந்தாலும் படிக்காத பாமர மக்களுக்கு உடனே புரியாது.
பொருளாதார மேதைகள் பணவீக்கம் என்ற வார்த்தையை பயன்படுத்த தொடங்கிய நேரத்தில் பாமர மக்கள் அதன் உள் அர்த்தம் புரியாமல் குழப்பம் அடைந்தனர்.
பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விலைவாசி உயர்வுதான் பணவீக்கம் என்று 'தினத்தந்தி' மூலம் மக்களுக்கு தெளிவுப்படுத்தியவர் மறைந்த தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் என்பது குறிப்பிடத்தக்கது.