ஆட்டோவில் சென்ற பெண்ணிடம் கத்திமுனையில் பணம், செல்போன் பறிப்பு
ஆண்டிப்பட்டி அருகே ஆட்டோவில் சவாரி சென்ற பெண்ணிடம் மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போனை பறித்தனர்.
ஆண்டிப்பட்டி அருகே ஆட்டோவில் சவாரி சென்ற பெண்ணிடம் மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போனை பறித்தனர்.
ஆட்டோவில் சவாரி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் சிங்கராஜ். இவரது மனைவி பஞ்சவர்ணம் (வயது 56). இவர் ஆண்டிப்பட்டி வாரச்சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பஞ்சவர்ணம், வாரச்சந்தையில் காய்கறிகளை வியாபாரம் செய்து முடித்துவிட்டு ஊருக்கு செல்வதற்காக ஆண்டிப்பட்டி பஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது அங்கு நின்றிருந்த ஒரு ஆட்டோவில் ஏறி, பிச்சம்பட்டி பகுதிக்கு செல்ல வேண்டும் என்று கூறினார். அந்த ஆட்டோவில் ஏற்கனவே 2 நபர்கள் இருந்தனர்.
ஆட்டோ சிறிது தூரம் சென்ற நிலையில், அதன் டிரைவர் வாகனத்தை பிச்சம்பட்டி நோக்கி செல்லாமல், வேறு வழியில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு ஓட்டிச்சென்றார்.
பணம், செல்போன் பறிப்பு
இதற்கிடையே ஆட்டோவை நடுவழியில் டிரைவர் நிறுத்தினார். இதனால் பஞ்சவர்ணம் என்னவென்று கேட்டார். அப்போது ஆட்டோ டிரைவர் மற்றும் உடன் வந்த 2 மர்மநபர்கள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி பஞ்சவர்ணத்தை மிரட்டினர். மேலும் அவரிடம் இருந்து ரூ.25 ஆயிரம் மற்றும் செல்போன், அவர் அணிந்திருந்த கவரிங் நகைகளை பறித்தனர். பின்னர் அவரை நடுவழியில் இறக்கிவிட்டுவிட்டு 3 பேரும் ஆட்டோவில் தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து பஞ்சவர்ணம், ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆட்டோ டிரைவர் மற்றும் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆட்டோவில் சவாரி சென்ற பெண்ணிடம் கத்திமுனையில் பணம், செல்போன் பறித்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.