கட்டிட காண்டிராக்டரை சித்ரவதை செய்து ரூ.5 லட்சம், நகை பறிப்பு
கட்டிட காண்டிராக்டரை சித்ரவதை செய்து ரூ.5 லட்சம் மற்றும் நகையை மர்ம கும்பல் பறித்து சென்றது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காந்திநகர், ஓம்சக்தி கோவில் தெருவை சேர்ந்தவர் வீரர் அப்துல்லா. கட்டிட காண்டிராக்டர். இவரது மகன் தாஜூதீன் (வயது 33). இவரும் கட்டிட காண்டிராக்டராக உள்ளார். தாஜூதீன் தற்போது கோவை கணபதி பகுதியில் ஒரு விடுதியில் தங்கியிருந்து வெள்ளக்கிணறு, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் கட்டிட பணிகளை கவனித்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று காலை தாஜூதீனும், அவரது தந்தை வீரர் அப்துல்லாவும் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது தாஜூதீனின் உடலில் கம்பியால் தாக்கிய காயங்களும், சூடு வைத்த காயங்களும் இருந்தன. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக தாஜூதீன் அனுமதிக்கப்பட்டார். பின்னர் வீரர் அப்துல்லா, தனது மகனை கோவையில் வைத்து மர்ம கும்பல் அடித்து, சித்ரவதை செய்து பணம், நகையை பறித்துவிட்டதாக வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில், கோவையில் உள்ள தனியார் விடுதியில் தாஜூதீன் தங்கியிருந்தார். கடந்த 30-ந்தேதி இரவு 15 பேர் கொண்ட கும்பல் அவரது அறைக்குள் புகுந்தது. பின்னர் அந்த கும்பல் தாஜூதீனை கம்பியால் தாக்கி, பற்ற வைத்த சிகரெட்டை கொண்டு உடலில் சூடு வைத்து சித்ரவதை செய்தனர். அதன்பிறகு தாஜூதீன் வைத்திருந்த ரூ.3 லட்சம், நகை, மோதிரம் உள்ளிட்ட 5 பவுன் நகை, வைர தோடு ஆகியவற்றை பறித்தனர்.
பின்னர் எனக்கு செல்போன் மூலம் அந்த கும்பல் தொடர்பு கொண்டு, மேலும் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியது. இதையடுத்து நான் ரூ.2 லட்சத்தை எடுத்துக்கொண்டு கோவைக்கு காரில் சென்றேன். ஆனால் வழியில் கோவை சூலூரில் அந்த கும்பல் வழிமறித்து ரூ.2 லட்சத்தை பறித்துக்கொண்டு, எனது மகனை என்னிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர் என்று வீரர் அப்துல்லா கூறியிருந்தார்.
அதன்பேரில் வத்தலக்குண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்தது கோவை என்பதால், கோவை போலீசாரின் விசாரணைக்கு பரிந்துரை செய்தனர்.