பெண் உள்பட 2 பேரிடம் ரூ.13.68 லட்சம் மோசடிசைபர் கிரைம் போலீசார் விசாரணை


பெண் உள்பட 2 பேரிடம் ரூ.13.68 லட்சம் மோசடிசைபர் கிரைம் போலீசார் விசாரணை
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

பெண் உள்பட 2 பேரிடம் ரூ.13 லட்சத்து 68 ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாக கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குறுந்தகவல்

ஓசூர் ஜூஜூவாடியை சேர்ந்தவர் முகமது ரபி. இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் வந்த குறுந்தகவலை படித்தார். அதில் ரூ.750 கிரிப்டோ இணையதளத்தில் முதலீடு செய்தால் ரூ.25 ஆயிரம் பெறலாம் என கூறப்பட்டு இருந்தது. இதைநம்பி அவர் முதலீடு செய்தார்.

இதில் சில முறை பணம் பெற்ற அவர் கிரிப்டோ கரன்சியில் ரூ.5 லட்சத்து 41 ஆயிரத்து 831-த்தை முதலீடு செய்தார். ஆனால் அவருக்கு எந்த லாபத்தொகையும் வரவில்லை. இதைத் தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இந்த மோசடி குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

ரூ.8.26 லட்சம் மோசடி

அதேபோல ஓசூர் மூக்கண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது32). இவர் டெலிகிராம் சமூக வலைதளத்தில் இருந்து வருகிறார். அதில் ஓட்டல்கள் குறித்து மதிப்பாய்வு செய்து தெரிவித்தால் அதிக லாபம் பெறலாம் என கூறப்பட்டு இருந்தது. அதன்படி குறிப்பிட்டிருந்த இணையதளத்தில் தொடர்பு கொண்டார்.

தொடர்ந்து அவர்கள் கூறியபடி சில நடைமுறை செலவுகளுக்காக ரூ.8 லட்சத்து 26 ஆயிரத்து 174-ஐ அவர் வங்கி கணக்குகளில் செலுத்தினார். ஆனால் எந்தவித தொகையும் அவருக்கு திரும்ப வரவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரவிக்குமார் இந்த மோசடி குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இந்த 2 புகார்கள் குறித்தும் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story