என்ஜினீயரிடம் ரூ.18¾ லட்சம் மோசடி
பகுதி நேர வேலை என்று கூறி என்ஜினீயரிடம் ரூ.18¾ லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பகுதி நேர வேலை என்று கூறி என்ஜினீயரிடம் ரூ.18¾ லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் நிறுவன மேலாளர்
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள வளையசெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் குமரேசன் (வயது 28). என்ஜினீயர். இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது செல்போன் எண்ணுக்கு டெலிகிராம் என்ற செயலி மூலம் பகுதி நேர வேலை என்று ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் பிரபல ஓட்டல்களின் பெயர்கள் வரும். அந்த செயலியில் வரும் குறுஞ்செய்திகளுக்கான பதில் சாட்டிங் செய்து கொண்டு இருக்க வேண்டும். பின்னர் அதற்கான ஊக்கத்தொகை வரும் என்று இருந்தது. இதை நம்பி அந்த செயலியில் வந்த தகவல் படி முதலில் சிறிய தொகையை குமரேசன் செலுத்தி உள்ளார்.
மோசடி
அதன்படி முதலில் ரூ.10,500 அவரது வங்கி கணக்கிற்கு வந்தது. அதே போன்று சில முறை அவரது வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது. இதனால் அதிகம் பணம் வரும் என்று நம்பிய குமரேசன் ரூ.19 லட்சத்து 83 ஆயிரத்து 843 செலுத்தி உள்ளார். ஆனால் அவருக்கு ரூ.94 ஆயிரத்து 475 மட்டும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
தொடர்ந்து அவர் செயலியை பயன்படுத்திய போது சரியான பதில் இல்லை. இதனால் பணம் மோசடி நடந்தது தெரிந்தது. இது குறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைலாசம் வழக்குப்பதிவு செய்து ரூ.18¾ லட்சம் மோசடி செய்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்.