பட்டதாரி வாலிபரிடம் ரூ.5¾ லட்சம் மோசடி
பரிசு விழுந்ததாக கூறி சங்ககிரி பட்டதாரி வாலிபரிடம் ரூ.5¾ லட்சம் மோசடி செய்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்
சங்ககிரி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய பட்டதாரி வாலிபர் ஒருவருடைய செல்போன் எண்ணுக்கு கடந்த மாதம் மர்ம நபர் ஒருவர் பேசினர். அதில் தான் லண்டனின் இருந்து பேசுவதாகவும், உங்களுக்கு 40 ஆயிரம் பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளதாகவும் கூறினார். மேலும் அந்த நபர் அவரிடம் இந்த பரிசு தொகையை வழங்க பல்வேறு காரணங்களுக்காக பணம் கேட்டார்.
இதை உண்மை என நம்பிய அந்த வாலிபர் மர்ம நபர் கூறிய வங்கி கணக்குக்கு பல்வேறு தவணைகளாக ரூ.5 லட்சத்து 73 ஆயிரம் செலுத்தினார். ஆனால் பரிசு ஏதும் அவருக்கு வழங்கப்படவில்லை. மேலும் மர்ம நபர் பேசிய எண்ணுக்கு தொடர்பு கொண்ட அது சுவிட்ச் ஆப் என்று வந்தது.
பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த வாலிபர் இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து புகார் கொடுத்தார். இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு சூப்பிரண்டு சிவக்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.