குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறிபெண்ணிடம் நூதன முறையில் ரூ.1½ லட்சம் மோசடிமர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1½ லட்சம் மோசடி செய்த மர்ம நபருக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு கிராமத்தை சேர்ந்த 21 வயதுடைய பெண், கடந்த சில நாட்களுக்கு முன்பு இணையதளத்தில் பகுதி நேர வேலை விஷயமாக பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதில் வந்த லிங்கை தொட்டதும் வாட்ஸ்-அப் மூலம் இணைப்பு கொடுக்கப்பட்டு அதிலிருந்து தொடர்புகொண்டு பேசிய நபர், அந்தப்பெண்ணுக்கு ஒரு லிங்கை அனுப்பினார்.
உடனே அப்பெண், அந்த லிங்கினுள் சென்று தனக்கென பயனர் முகவரி, பாஸ்வேர்ட் ஆகியவற்றை பதிவேற்றம் செய்தார். பின்னர் அந்த நபர் டெலிகிராம் ஐடி மூலம் தொடர்பு கொண்டு சிறிய தொகையை ரீசார்ஜ் செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறினார். இதை நம்பிய அந்த பெண், முதலில் ரூ.500 செலுத்தி ரூ.1,429 ஆக திரும்பப்பெற்றார்.
அதன் பின்னர் அவர், தனது வங்கி கணக்கில் இருந்தும், தனது தாய் மற்றும் உறவினர்களின் வங்கி கணக்கின் மூலமாகவும் மொத்தம் ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்து 824-ஐ அந்த நபர் அனுப்பச்சொன்ன வங்கிகளின் கணக்கிற்கு 22 தவணைகளாக அனுப்பி வைத்தார். ஆனால் பணத்தைப்பெற்ற அந்த நபர், டாஸ்க் முடித்தும் அந்த பெண்ணுக்கு சேர வேண்டிய தொகையை கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து அந்த பெண், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.