அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி
சேலம் அருகே பெத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் சதீஷ். இவர், சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அதில், 'கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் தனது உறவினரான முருங்கப்பட்டியை சேர்ந்த அமுதவள்ளி, அவருடைய கணவர் கணேசன் ஆகியோர் வருவாய்த்துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக தெரிவித்தனர். அதை உண்மை என்று நம்பி அரசு வேலைக்காக ரூ.5 லட்சத்தை கொடுத்தேன். இதேபோல், மேலும் சிலரும் தங்களுக்கு அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் லட்சக்கணக்கில் அவரிடம் பணத்தை கொடுத்துள்ளனர். அதன்பிறகு அமுதவள்ளியும், கணேசனும் எங்களுக்கு நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பணியாற்ற பணி ஆணை கொடுத்தனர். ஆனால் அந்த பணி ஆணைகள் அனைத்தும் போலியானது என தெரியவந்தது. இதனால் பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டால் அவர்கள் மிரட்டல் விடுக்கின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து சதீசின் புகார் மனு குறித்து மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராணி விசாரணை நடத்தினார். இதையடுத்து அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு, போலி பணி நியமன ஆணைகளை வழங்கியதாக அமுதவள்ளி, அவருடைய கணவர் கணேசன் மீது கூட்டு சதி, மோசடி உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களை தேடி வருகின்றனர்.