தொழிலாளியை மிரட்டி நகை-பணம் பறிப்பு
தஞ்சையில் தொழிலாளியை மிரட்டி நகை-பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர்;
தஞ்சையில் தொழிலாளியை மிரட்டி நகை-பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆட்டுக்கிடை
புதுக்கோட்டையை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 40). தொழிலாளியான இவர் ஊர் ஊராக சென்று ஆட்டு கிடை போட்டு பிழைப்பு நடத்தி வருகிறார். சம்பவத்தன்று தஞ்சை பள்ளியக்ரஹாரம் பகுதியில் உள்ள ஒரு விளை நிலத்தில் ஆடு கிடை போட்டார். இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் ரவிக்குமார் பள்ளியக்ரஹாரம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளை ஒரு வாலிபர் வழிமறித்து நிறுத்தினார்.
கைது
திடீரென அந்த வாலிபர் உங்கள் மோதிரம், செல்போன் பணத்தை கொடுக்க வில்லையென்றால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார். இதனால் ரவிக்குமார், தான் அணிந்திருந்த மோதிரம், செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரத்தை அந்த வாலிபரிடம் கொடுத்தார். இதையடுத்து வாலிபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.இது குறித்து தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் ரவிக்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மேற்பார்வையில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், தொழிலாளியை மிரட்டி பணம், மோதிரத்தை பறித்தவர் தஞ்சை பள்ளியக்ரஹாரத்தை சேர்ந்த கிறிஸ்துவராஜ் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.