சேலத்தில்தனியார் வங்கியில் ரூ.3 லட்சம் கையாடல்மேலாளர் மீது வழக்குப்பதிவு
சேலம்
சேலத்தில் தனியார் வங்கியில் ரூ.3 லட்சம் கையாடல் செய்த மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தனியார் வங்கி
சேலம் டவுன் பகுதியில் தனியார் சிறுகடன் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் கிளை மேலாளரான மேகநாதன் என்பவர் சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:- சேலம் டவுன் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் சிறுகடன் வங்கியில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரையிலான வரவு, செலவு கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது வங்கியில் மேலாளரான முரளி அசோகன் என்பவர் பணியில் இருந்த போது, வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்த மாத தவணை மற்றும் நிலுவைத்தொகையை சரிவர வரவு வைக்காமலும், வங்கியில் செலுத்தாமலும் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ரூ.3 லட்சம் கையாடல்
மேலும் அவர் சில வாடிக்கையாளர்களிடம் தவணை தொகையை பெற்று கொண்டு கடன் அட்டையில் கையொப்பம் இடாமல் இருந்ததும் தெரியவந்தது. மொத்தம் ரூ.3 லட்சத்து 12 ஆயிரம் அவர் கையாடல் செய்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மோசடி தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்பாபு கண்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி முரளி அசோகன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.