ஈரோட்டில் பண மழை பொழிகிறது: கமல் பிரசாரம் செய்வதால் ஓட்டு கிடைக்காது- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
ஈரோட்டில் பண மழை பொழிகிறது. கமல் பிரசாரம் செய்வதால் ஓட்டு கிடைக்காது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
ஈரோட்டில் பண மழை பொழிகிறது. கமல் பிரசாரம் செய்வதால் ஓட்டு கிடைக்காது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
புதுபார்முலா
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பாக ஜெயலிதா பிறந்த நாள் ஏற்பாடு தொடர்பான ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்களின் ஆதரவோடு அ.தி.மு.க. தேர்தல் பிரசாரம் சிறப்பாக நடக்கிறது. அந்த மக்களே வித்தியாசமானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அனைத்து விஷயங்களையும் புரிந்து வைத்து இருக்கிறார்கள். அவர்கள் இதுவரை எங்களது பிரச்சினைகளை கேட்க யாரும் வரவில்லை. எம்.எல்.ஏ., கவுன்சிலர்கள் என யாரும் தொகுதிக்குள் வரவில்லை. ஆனால் ஓட்டுக்காக இப்போது அமைச்சர்கள் வந்து முகாமிட்டு இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சியான வைத்தியத்தை ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் கொடுக்க போகிறார்கள்.
புதுப்புது கண்டுபிடிப்புகளுக்கு நோபல் பரிசு கொடுப்பது போல, இடைத்தேர்தலில் வாக்குகளை கவர தி.மு.க. செய்யும் யுக்திகளுக்கே பரிசு கொடுக்கலாம். திருமங்கலம், அரவக்குறிச்சி பார்முலாவை போல ஈரோடு கிழக்கிலும் புது பார்முலாவை கடைபிடிக்கிறார்கள். ஆடு, மாடுகளை கொட்டகையில் அடைப்பது போல மக்களை கூட்டமாக அழைத்து சென்று வைத்து விடுகிறார்கள். மாலை வரை இருந்தால் பிரியாணி, பிஸ்கெட், ரூ.1500 வரை தருகிறார்கள். அங்கு பண மழை பொழிகிறது. ஏன் இவ்வளவு பணம் கொடுக்கிறார்கள் என்று மக்களே ஆச்சரியப்படுகிறார்கள். முகம் சுளிக்கிறார்கள்.
கண் துடைப்பு
தேர்தல் ஆணைய நடவடிக்கை கண் துடைப்பாக இருக்கிறது. அங்குள்ள அதிகாரிகள் அனைவரும் தி.மு.க.விற்கு ஆதரவாகதான் இருக்கிறார்கள். தி.மு.க.விற்கு எதிராக இருந்த கமல், இப்போது தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். அவருடைய கொள்கைகள் எல்லாம் பணத்திற்காக விலை போவது தான். படத்தில் நடிக்கும் கமலுக்கு ரூ.60 கோடி கிடைக்கும். அதனை விட பிரசாரத்திற்கு வாருங்கள் கூட தருகிறோம் என்று சொல்லி இருப்பார்கள். அதனால் அவர் பிரசாரத்திற்கு கால்ஷீட் கொடுத்து இருக்கிறார்.
அவரை ஒரு அரசியல்வாதியாக நாங்கள் பார்ப்பதில்லை. அவர் ஒரு உலக நாயகன். சிறந்த நடிகர். கமலை பார்க்க மக்கள் கூடுவார்கள். ஆனால் கமலின் பேச்சை கேட்டால் தி.மு.க.விற்கு ஓட்டு போட நினைப்பவர்கள் கூட ஓட்டு போட மாட்டார்கள். அவர் என்ன பேசுகிறார் என்று அவருக்கும் தெரியாது. வாக்காளர்களுக்கும் புரியாது. ஆளுங்கட்சியின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும். அமைச்சர்களின் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.