மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவரிடம் ரூ.8 லட்சம் வழிப்பறி


மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவரிடம் ரூ.8 லட்சம் வழிப்பறி
x

தஞ்சையில், மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவரிடம் ரூ.8 லட்சத்தை வழிப்பறி செய்த 3 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர், நவ.30-

தஞ்சையில், மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவரிடம் ரூ.8 லட்சத்தை வழிப்பறி செய்த 3 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

முதியவர்

திருச்சி பெரியமிளகுபாறையை சேர்ந்தவர் நாகரத்தினம்(வயது 65). இவர், திருச்சியை சேர்ந்த உருளைக்கிழங்கு மொத்த வியாபாரி வெங்கடாசலம் என்பவரிடம் வேலைபார்த்து வருகிறார். திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வெங்கடாசலம், உருளைக்கிழங்கு வியாபாரம் செய்து வருகிறார்.இது தொடர்பாக அந்த வியாபாரிகளிடம் இருந்து பணத்தை நாகரத்தினம் வசூல் செய்து கொடுப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் நாகரத்தினம் தஞ்சைக்கு வந்து வியாபாரிகளிடம் ரூ.7 லட்சத்து 94 ஆயிரம் பணம் வசூல் செய்துள்ளார்.

3 மர்ம நபர்கள்

பின்னர் அந்த பணத்தை ஒரு பையில் வைத்து தோளில் தொங்கப்விட்டபடி தனது மோட்டார் சைக்கிளில் தஞ்சையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டார். தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள இந்திரா நகர் என்ற இடத்தில்சென்றபோது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் 3 மர்ம நபர்கள் வந்துள்ளனர்.அந்த மர்ம நபர்கள், நாகரத்தினம் வைத்திருந்த பையை பிடித்து இழுத்தனர். இதில் நிலைதடுமாறி அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

ரூ.7 லட்சத்து 94 ஆயிரம்

உடனே மர்ம நபர்கள் ரூ.7 லட்சத்து 94 ஆயிரம் இருந்த பையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து வேகமாக சென்று விட்டனர்.உடனே நாகரத்தினம் திருடன். திருடன். என சத்தம் போட்டார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து மாயமாக மறைந்து விட்டனர்.

போலீசில் புகார்

இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் நாகரத்தினம் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.7 லட்சத்து 94 ஆயிரத்தை பறித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story