மூதாட்டியிடம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பறிப்பு
அய்யம்பேட்டையில் மூதாட்டியிடம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தை மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் பறித்து சென்றார்.
அய்யம்பேட்டை, ஆக.3 -
அய்யம்பேட்டையில் மூதாட்டியிடம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தை மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் பறித்து சென்றார்.
பணம் பறிப்பு
அய்யம்பேட்டை பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் முகமது இசாக். இவருடைய மனைவி நஜிமுன்னிசா(வயது70). இவருடைய மகன், மகள்களுக்கு திருமணம் ஆகி விட்ட நிலையில் நஜிமுன்னிசா மட்டும் தனிமையில் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் தன் நகைகளை அய்யம்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அடகு வைத்திருந்தார்.நேற்று காலை நகைகளை மீட்க ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மற்றும், வங்கி பாஸ் புத்தகம், ரேசன் கார்டு, செல்போன், வீட்டு சாவி ஆகியவற்றை ஒரு பையில் போட்டு எடுத்துக் கொண்டு சின்ன தைக்கால் தெரு வழியாக வங்கிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் நஜிமுன்னிசா கையில் வைத்திருந்த பையை பறித்துக் கொண்டு வேகமாக சென்று விட்டார்.
வலைவீச்சு
இதனால் அதிர்ச்சி அடைந்த நஜிமுன்னிசா மோட்டார் சைக்கிளின் பின்புறம் ஓடினார். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் மெயின் ரோட்டுக்கு சென்று தப்பி சென்று விட்டார். இதுகுறித்து நஜிமுன்னிசா அய்யம்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பணத்தை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.