விவசாயியின் கவனத்தை திசை திருப்பி ரூ.72 ஆயிரம் திருட்டு
கபிஸ்தலம் அருகே வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்த விவசாயியின் கவனத்தை திசை திருப்பி ரூ.72 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கபிஸ்தலம்;
கபிஸ்தலம் அருகே வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்த விவசாயியின் கவனத்தை திசை திருப்பி ரூ.72 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
விவசாயி
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள ராமானுஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன்(வயது65). விவசாயியான இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தான் விளைவித்த நெல்லை விற்பனை செய்தார். பின்னர் இதற்குரிய பணம் வங்கியில் அவரது கணக்கில் செலுத்தப்பட்டு இருந்ததை அறிந்து பணத்தை எடுத்து செல்ல நேற்று மதியம் கபிஸ்தலத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றார். வங்கியில் இருந்து ரூ.72 ஆயிரத்தை எடுத்த பின் வங்கியின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிளில் முன்புற கவரில் பணத்தை வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு மீண்டும் ராமானுஜபுரம் நோக்கி சென்றார்.
ரூ.72 ஆயிரம் திருட்டு
அப்போது இதை கவனித்துக்கொண்டிருந்த ஹெல்மெட் அணிந்த மர்மநபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் நடராஜனை பின் தொடர்ந்து சென்றனர். கபிஸ்தலம் பவுண்டு அருகில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது நடராஜனை மறித்த மர்ம நபர்கள் உங்கள் வாகனத்தில் இருந்து ரூபாய் நோட்டுகள் கீேழ விழுந்து கிடக்கிறது என கூறினர். இதை நம்பிய நடராஜன் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு திரும்பி பார்த்தார்.அப்போது மர்ம நபர்கள் இருவரும் நடராஜன் வாகனத்தில் இருந்த ரூ.72 ஆயிரத்தை திருடிக்கொண்டு தப்பி சென்று விட்டனா். பணம் திருட்டுப்போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்த நடராஜன் கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில்புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.