மரங்கள் மீது பரண் அமைத்து கண்காணிப்பு
வாச்சிக்கொல்லி, புளியம்பாறை பகுதியில் பி.எம்.-2 காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மரங்கள் மீது பரண் அமைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
கூடலூர்,
வாச்சிக்கொல்லி, புளியம்பாறை பகுதியில் பி.எம்.-2 காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மரங்கள் மீது பரண் அமைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
காட்டு யானை
கூடலூர் தாலுகா தேவாலா வாழவயல் பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி. இவரை கடந்த மாதம் 20-ந் தேதி பி.எம்.-2 என அழைக்கப்படும் காட்டு யானை தாக்கி கொன்றது. இதை தொடர்ந்து காட்டு யானையை பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 4 கும்கி யானைகளை முதுமலையில் இருந்து வனத்துறையினர் அழைத்து வந்தனர்.
தொடர்ந்து 2 வாரங்களுக்கும் மேலாக தேவாலா, புளியம்பாரை, பாடந்தொரை உள்ளிட்ட சுற்று வட்டார வனப்பகுதியில் காட்டு யானையை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், காட்டு யானை அங்கிருந்து இடம்பெயர்ந்து உள்ளது. இதனால் கால்நடை மருத்துவக் குழுவினர், வன ஊழியர்கள் ரோந்து சென்று டிரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர். ஆனால், காட்டு யானையின் இருப்பிடத்தை வனத்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
பரண் அமைத்து கண்காணிப்பு
இந்தநிலையில் நேற்று வாச்சிக்கொல்லி, நீடில் ராக், தேவர்சோலை எஸ்டேட், வுட்பிரையர் பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாச்சிக்கொல்லி, புளியம்பாரா வனப்பகுதியில் உள்ள சில மரங்களில் பரண்கள் அமைத்தனர். அதில் வன ஊழியர்கள், மயக்க ஊசி செலுத்தும் துப்பாக்கியுடன் கூடிய கால்நடை டாக்டர் அமர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தொடர்ந்து தேடப்படும் காட்டு யானை இடம் பெயர்ந்து அப்பகுதிக்கு வரும் சமயத்தில், மரத்தில் இருந்து மயக்க ஊசி செலுத்தி யானையை பிடிப்பதற்காக வனத்துறையினர் திட்டமிட்டு உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, பி.எம்.-2 காட்டு யானை கேரளா-தமிழக எல்லைக்கு சென்று விடுகிறது. அடர்ந்த வனப்பகுதி என்பதால் அதை பின் தொடர்ந்து செல்ல முடியவில்லை. மேலும் கும்கி யானைகள் நடமாட்டம் இருப்பதால் காட்டு யானை இடம் பெயர்ந்து வருகிறது. இதனால் மரங்கள் மீது பரண் அமைத்து கண்காணிக்கப்படுகிறது. இந்த சமயத்தில் காட்டு யானை வந்தாலும் உடனடியாக மயக்க ஊசி செலுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றனர்.