கண்காணிப்பு அலுவலர் அபூர்வா ஆய்வு
நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அபூர்வா பார்வையிட்டு ஆய்வு செய்தார்
நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அபூர்வா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வு
வடகிழக்கு பருவமழை காலங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்காக ஓடை, மழை நீர் வடிகால் ஆகியவை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சாந்திநகர் மணிக்கூண்டு அருகில் பிராய்ந்தான் குளத்தில் இருந்து வெட்டான்குளம் வரை செல்லும் வடிகால் ஓடையை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அபூர்வா பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து ரஹ்மத்நகரில் 4 வழிச்சாலையில் இணைப்புச் சாலை அருகில் மழைநீர் வடிகால் ஒடை அமைக்கும் பணியையும், வி.எம்.சத்திரம் அப்துல்ரகுமான் முதலாளி நகரில் புதிதாக மழைநீர் ஓடை அமைக்கப்பட்டு வரும் பணியினையும் பார்வையிட்டார்.
போலீஸ் நிலையம்
புதிய பஸ் நிலையம் அருகில் வேய்ந்தான்குளம் மற்றும் பாளையங்கோட்டையில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ள மேடை போலீஸ் நிலையத்திலும் ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழை வருவதற்கு முன்பு அனைத்து மழைநீர் வடிகாலையும் தூர்வாரி மழைநீர் தங்கு தடை இன்றி செல்ல அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பாளர் அபூர்வா உத்தரவிட்டார்.
ராதாபுரம்
முன்னதாக ராதாபுரம் பகுதியில் மாசிலாபுரம் குளத்தில், பிராகுளம் பகுதியில் நடைபெறும் பணிகளையும், அங்கன்வாடி பள்ளி கட்டிடத்தையும், ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து திசையன்விளை தாலுகா அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மகளிர் திட்ட அலுவலர் சாந்தி, பாளையங்கோட்டை தாசில்தார் ஆனந்த பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.