சமத்துவபுரம் மறுசீரமைப்பு உள்ளிட்ட வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு


சமத்துவபுரம் மறுசீரமைப்பு உள்ளிட்ட  வளர்ச்சி திட்டப்பணிகளை  கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
x

சேலம் மாவட்டத்தில் சமத்துவபுரம் மறுசீரமைப்பு உள்பட பல்வேறு இடங்களில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

சேலம்

சேலம்,

திட்டப்பணிகள்

சேலம் மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவருமான எஸ்.சிவசண்முகராஜா நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

முதலில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் நெய்காரப்பட்டி சமத்துவபுரம் மறுசீரமைப்பு பணிகள், உடையாப்பட்டியில் உள்ள சேலம் வடக்கு போக்குவரத்துத் துறை மண்டல அலுவலகத்தில் வாகனங்கள் பதிவு செய்யும் முறை, அங்கு இணைய வழியில் அபராதம் வசூலிக்கும் முறைகள் உள்ளிட்ட பணிகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிகிச்சை முறைகள் ஆய்வு

இதைதொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் வாழப்பாடி தாலுகாவில் காட்டு வேப்பிலைப்பட்டி, சேசன்சாவடியில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும், பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா? மருந்துகளின் இருப்பு உள்ளிட்ட அடிப்படை சுகாதார திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், கோப்புகள் மற்றும் கட்டுமான பணிகளையும், வாழப்பாடியில் உள்ள அரசினர் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு மதிய உணவு தயார் செய்யப்பட்டு வரும் பணிகளையும், முத்தம்பட்டி கேட் பகுதியில் உள்ள பகுதி நேர ரேஷன் கடையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் அளவு, பொருட்களின் இருப்பு குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எஸ்.சிவசண்முகராஜா ஆய்வு செய்தார்.

தாலுகா அலுவலகத்தில்....

பின்னர், வாழப்பாடி தாசில்தார் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டுவரும் அலுவலர்களின் பதிவேடுகள் குறித்தும், பொதுமக்களுக்கு பட்டா, சான்றிதழ்கள், குடும்ப அட்டைகள் மற்றும் பிற வருவாய்த் துறை சேவைகள் முறையாக வழங்கப்படுவது குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.

ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர், உதவி கலெக்டர் (பயிற்சி) வாகி சங்கீத் பல்வந்த், உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

காலை உணவு திட்ட செயல்பாடுகள் ஆய்வு

இதனிடையே, சேலம் மாநகராட்சி மணியனூர் மற்றும் சீலநாயக்கன்பட்டி தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிவசண்முகராஜா நேரில் ஆய்வு செய்தார். அப்போது, மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story