உலா வரும் குரங்கால் பொதுமக்கள் அச்சம்
உடுமலை பகுதியில் உலாவரும் குரங்கால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அதனை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உருக்குலைந்த வனம்
மலையும் மலை சார்ந்த பகுதிகளையும் வாழ்விடமாகக் கொண்டது குரங்குகள். அடர்ந்த வனப்பகுதியில் விளைகின்ற பழங்களை உணவாகக்கொண்டு ஆறுகள் மூலமாக தாகத்தை தீர்த்தும் குடும்பம் குடும்பமாக உயிர் வாழ்ந்து வருகின்றன. இந்த சூழலில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மழைப்பொழிவு குறைந்ததால் வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்தது. அதன் கோரப்பிடியில் சிக்கி வனம் உருக்குழைந்து போனது.
அதைத்தொடர்ந்து வனவிலங்குகள் அடிவாரப் பகுதியை நோக்கி பயணத்தை துவக்கியது. நீண்ட போராட்டத்துக்கு பின்பு உயிரை கையில் பிடித்துக் கொண்டு பசி தாகத்தோடு அடிவாரத்தை அடைந்தன யானை, காட்டெருமை, கடமான், குரங்கு, மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள்.
அடைக்கலம்
அவற்றுக்கு அடிவாரப்பகுதியில் உள்ள அணைகள் தாகத்தை தீர்த்தும் உணவையும் பூர்த்தி செய்து அடைக்கலம் கொடுத்தது. அதன் பின்பு மழை பெய்ததையொட்டி யானை, காட்டெருமை, மான் உள்ளிட்டவை மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்பிச் சென்றது. ஆனால் அடிவாரப் பகுதியின் சூழலில் வாழ பழகிக் கொண்ட குரங்கு, மயில், காட்டுப்பன்றிகள் தனது இனத்தை பெருக்கம் செய்து வாழ்விடத்தையும் அடிவாரப் பகுதியிலேயே அமைத்துக் கொண்டது.
அது முதல் இன்று வரையிலும் குரங்குகள் அடிவாரப் பகுதியில் வாழ்ந்து வருவதுடன் சுற்றுலா பயணிகள் பக்தர்கள் கொண்டு வருகின்ற உணவுப்பொருட்களை பறித்துச்சென்று உணவாக கொண்டு குடும்பம் குடும்பமாக வசித்து வருகின்றன. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தாகத்தை தீர்ப்பதற்காக அலைந்து திரிந்து வருகின்றன. அதில் குரங்குகளும் அடங்கும்.
உடுமலைக்கு வந்த குரங்கு
அந்த வகையில் உணவைத்தேடி அலைந்த குரங்கு ஒன்று இரவு நேரத்தில் வாகனத்தில் ஏறி உடுமலைப்பகுதிக்கு வந்ததாக தெரிகிறது. அது திரும்பிச் செல்வதற்கு வழி தெரியாமல் கட்டிடங்கள் மீது தாவியும் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வந்த வண்ணம் உள்ளது. மேலும் வீடுகளில் வளர்க்கும் செடிகளில் உள்ள பழங்களை பிடுங்கித் தின்றும் வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.மேலும் அதை கூண்டு வைத்து பிடித்து வனப்பதிக்குள் கொண்டு சென்று விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.