அத்துமீறும் குரங்குகளால் சுற்றுலா பயணிகள் அச்சம்


அத்துமீறும் குரங்குகளால் சுற்றுலா பயணிகள் அச்சம்
x
திருப்பூர்


திருமூர்த்திமலையில் அத்துமீறும் குரங்குகளால் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

வனவிலங்குகள்

மலையும், மலை சார்ந்த பகுதிகளையும் வாழ்விடமாகக் கொண்டது குரங்குகள். அடர்ந்த வனப்பகுதியில் விளைகின்ற பழங்களை உணவாகக்கொண்டு ஆறுகள் மூலமாக தாகத்தை தீர்த்தும் குடும்பம் குடும்பமாக உயிர் வாழ்ந்து வருகின்றன. இந்த சூழலில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மழைப்பொழிவு குறைந்ததால் வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்தது.

அதன் கோரப்பிடியில் சிக்கி வனம் உறுக்குழைந்து போனது. அதைத் தொடர்ந்து வனவிலங்குகள் அடிவாரப்பகுதியை நோக்கி பயணத்தை தொடங்கியது. நீண்ட போராட்டத்துக்கு பின்பு உயிரை கையில் பிடித்துக்கொண்டு பசி தாகத்தோடு அடிவாரத்தை அடைந்தது. யானை, காட்டெருமை, கடமான், குரங்கு, மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள். அவற்றுக்கு அடிவாரப்பகுதியில் உள்ள அணைகள் தாகத்தை தீர்த்தும், உணவையும் பூர்த்தி செய்து அடைக்கலம் கொடுத்தது.

குரங்குகள்

அதன் பின்பு மழை பெய்ததையொட்டி யானை, காட்டெருமை, மான் உள்ளிட்டவை மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்பிச்சென்றது. ஆனால் அடிவாரப்பகுதியின் சூழலில் வாழ பழகிக்கொண்ட குரங்கு, மயில், காட்டுப்பன்றிகள் தனது இனத்தை பெருக்கம் செய்து வாழ்விடத்தையும் அடிவாரப்பகுதியிலேயே அமைத்துககொண்டது.

அது முதல் இன்று வரையிலும் பல தலைமுறைகள் கடந்து குரங்குகள் அடிவாரப்பகுதியில் வாழ்ந்து வருவதுடன் சுற்றுலா பயணிகள் பக்தர்கள் கொண்டு வருகின்ற உணவுப்பொருட்களை பறித்துச்சென்று உணவாக கொண்டு குடும்பம் குடும்பமாக வசித்து வருகின்றன.

சேதப்படுத்தி விடுகிறது

இந்த சூழலில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தாகத்தை தீர்ப்பதற்காக அலைந்து திரிந்து வருகின்றன. அதில் குரங்குகளும் அடங்கும். அவை வெப்பத்தை தாங்க முடியாமல் சுற்றுலா பயணிகள் கொண்டு வருகின்ற குளிர்பானங்களை பறித்து சென்று குடித்து வருகிறது.

அதுமட்டுமின்றி கோவில் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள மோட்டார் சைக்கிளில் உள்ள பையை சோதனை இட்டும் வருகிறது. அப்போது அதில் உணவுப்பொருட்கள் இல்லை என்றால் ஆத்திரமடைந்து பையையும், சீட்டையும் சேதப்படுத்தி விடுகிறது.

கூண்டு வைத்து பிடித்து

இதனால் சுற்றுலாபயணிகள் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். குரங்குகள் பசி, தாகத்தோடு அலைவது பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தாலும் அதன் சேட்டைகளால் இழப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாததாக உள்ளது. இதனால் அடிவாரப் பகுதியில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட வேண்டும்.


Next Story